அனைத்துக் கல்லூரிகளிலும் செமெஸ்டர் தேர்வு, மற்றும் அரியர் தேர்வுகள் ரத்து செய்ததோடு தேர்வு கட்டணம் செலுத்திய அனைவரும் தேர்ச்சி என முதலமைச்சர் அறிவித்துள்ளதற்கு நன்றி தெரிவித்து திண்டுக்கல் நகரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் தேர்வுகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து செமெஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது. இதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அனைத்து கலை, அறிவியல், தொழில்நுட்ப மற்றும் பொறியியல் கல்லூரிகளின் அனைத்து செமெஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாகவும், செமெஸ்டர் தேர்வுக்காக பணம் கட்டியிருந்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.இதற்கு நன்றி தெரிவித்து திண்டுக்கலில் மாணவர்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் அரியரை வென்ற அரசனே, மாணவர்களின் பாகுபலியே போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த போஸ்டர்கள் திண்டுக்கல் நகர் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.