புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நீட் தேர்வு எழுதுவதற்கான ஹால்டிக்கெட் வராததால் மனமுடைந்த மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள டி.களபம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் மகள் இவர் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துள்ளார். படிப்பில் மிகவும் ஆர்வம் கொண்ட தனது மகள் சிறுவயது முதலே மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நீட் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்துள்ளார். ஆனால் இதுவரை தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் வரவில்லை. இதனால் தனது சக நண்பர்களுக்கு போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது பலருக்கு ஹால் டிக்கெட் வந்தது தெரியவந்துள்ளது. இதனை வீட்டில் கூறி அழுதுள்ளார். அப்போது அவரது அம்மாவும் மகளின் மருத்துவர் ஆசை மண்ணாகி போய்விட்டதே என்று கூறி அழுதுள்ளார். இதனால் மனமுடைந்த மகள் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டார். உயிருக்கு போராடிய அவரை குடும்பத்தினரும் அக்கம்பக்கத்தினரும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து கதறி அழுத உறவினர்கள் அவரது உடலை சொந்த ஊரிலேயே தகனம் செய்தனர். இதுகுறித்து ஆலங்குடி போலீஸ் டிஎஸ்பி முத்துராஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர் மருத்துவர் கனவில் வாழ்ந்துவந்த மாணவி தனது கனவு நிறைவேறாது என்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை செய்தியாளர் கிருஷ்ணமூர்த்தி