அவதானப்பட்டி மாரியம்மன் கோயிலில் டோக்கன் விநியோகித்து பக்தர்களிடம் பணம் வசூல் செய்ய முயன்ற அறநிலையத்துறை அதிகாரிகள்
கோயில் அறங்காவலர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து திரும்பிச் சென்றனர்
கிருஷ்ணகிரி அருகே உள்ள அவதானப்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலை உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி 13 பேர் கொண்ட அறங்காவலர்குழுவினர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிர்வகித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை கோயிலுக்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பூஜைக்கு வருவோரிடம் டோக்கன் வழங்கி பணம் வசூல் செய்ய முயன்றனர். இதற்கு கோயிலை நிர்வகிக்கும் அறங்காவலர் குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அறநிலையத்துறை அதிகாரிகளை டோக்கன் விநியோகிக்க அனுமதிக்கவில்லை.
இதனால் அதிகாரி மற்றும் குழுவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. எந்தச் சூழ்நிலையிலும் அறநிலையத்துறை அதிகாரிகளை அனுமதிப்பதில்லை என்பதில் அறங்காவல் குழுவினர் உறுதியாக இருந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும், உயரதிகாரிகள் அனுமதியோடு, முன் ஏற்பாடு செய்து பணிகளை மேற்கொள்ள அறநிலையத்துறை அதிகாரிகளை அறிவுறுத்தினர். இதையடுத்து அறநிலையத் துறை அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.