ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூராட்சியில் ஏர்டெல் நிறுவனம் மூலம் கேபிள் பதிக்கும் பணியின் போது ஏற்படுத்திய குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் பேரூராட்சி பணியாளர்கள் இரவு பகலாக தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பவானியிலிருந்து ஆப்பக்கூடல் வழியாக ஏர்டெல் நிறுவனம் அந்தியூருக்கு இணைப்பு கொண்டு நோக்கில் கேபிள் பதித்து வருகிறது. அந்தியூர் பேரூராட்சிக்குட்பட்ட பாலமுருகன் தியேட்டர் எதிர்புறம் கேபிள் வயர்கள் பதிக்க போடப்பட்ட துளையால், கூத்தம்பூண்டியிலிருந்து அந்தியூர் பேரூராட்சி மக்களின் தேவைக்காக கொண்டு வரப்படும் பிரதான குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, உடைந்த குடிநீர் குழாயிலிருந்து தண்ணீர் வெளியேறி வீணாகி கொண்டிருந்தது. தகவல் அறிந்த செயல் அலுவலர் ஹரி ராமமூர்த்தி, உடைப்பு ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டார்.
மேலும், அப்பகுதியிலிருந்து தண்ணீர் வீணாவதைத் தடுக்கும் வகையில், பிரதான குடிநீர் குழாய் அடைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், உடைந்து போன குடிநீர் குழாயை சரி செய்யும் பணியில் பேரூராட்சி பணியாளர்கள் இரண்டு நாட்களாக இரவு பகலாக தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் மழை குறுக்கீடு காரணமாக, பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டது.
இதுகுறித்து செயல் அலுவலர் ஹரி ராமமூர்த்தி கூறுகையில், ஏர்டெல் நிறுவனத்தின் மூலம் கொண்டு வரப்படும் புதிய இணைப்புக்கான கேபிள் வயர்கள் பதிக்கும் பணியின்போது குழாய் உடைப்பு ஏற்பட்டது தெரிந்தது. இதனால், கேபிள் வயர்கள் பதிக்கும் பணியை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
இன்னும் 24 மணி நேரத்தில் குழாய் உடைப்பு சரி செய்யப்படும் என்று கூறிய செயல் அலுவலர், அசௌகர்யமான சூழ்நிலையை பொதுமக்கள் பொறுத்துக் கொள்ளவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
ஈரோடு அந்தியூர் செய்தியாளர் எஸ் திருபாலா