திரு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நாடகம் நடத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல்லில் நாடக நடிகர்கள் வேடமிட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்லில் 500க்கும் மேற்பட்ட நாடக நடிகர்கள் உள்ளனர். கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில். தற்போது தமிழக அரசு படிப்படியாக பல்வேறு தளர்வுகளை அளித்து வருகிறது. அந்த வகையில் நாடக நடிகர்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய நாடகங்களை திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நடத்த அனுமதிக்க வேண்டும்.
கொரோனா நோய்த்தொற்று காலங்களில் நிகழ்ச்சிகள் இன்றி வருவாய் இழந்து தவிக்கும் நாடக நடிகர்களுக்கு ஆறு மாதத்திற்கு நிவாரண நிதி வழங்க வேண்டும். கலை பண்பாட்டு மையத்தை திண்டுக்கலில் அமைக்க வேண்டும். வயதான ஏழை நாடக நடிகர்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்ததும் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நாடக நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்பு நாடக நடிகர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். நாடக நடிகர்கள் நாடகங்களில் நடிப்பதற்கான வேடமிட்டு போராட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.