கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ குற்றச்சாட்டு
கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், கிராஸ்கட் சாலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில், மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, முன்னாள் அமைச்சர் இரகுமான்கான், மூத்த காங்கிரஸ் தலைவரும், எம்பியுமான வசந்தகுமார் ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, கொரோனா தொற்று பரவலை தடுக்க தவறிய அதிமுக அரசிற்கும், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி.வேலுமணிக்கும் கடும் கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ பேட்டியின்போது கூறுகையில்;- கொரோனா தொற்று கோவையை பொறுத்தவரை, மிக வேகமாக பரவி வருகின்றது. தினமும் 600 பேருக்கு புதிய தொற்று உருவாகின்றது. இதற்கு காரணம் மெத்தன போக்குடன் செயல்படும், உள்ளாட்சித்துறையும், மாவட்ட நிர்வாகமுமே. எடப்பாடி பழனிச்சாமி, கோவையில் தொற்று குறைந்து விட்டது என்றார். ஆனால், இன்றைய நிலை என்ன என கேள்வி ?எழுப்பியவர், ஏற்கனவே, மாவட்ட ஆட்சியரை சந்தித்து 32 க்கும் மேற்பட்ட ஆலோசனைகளை வழங்கினோம். பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் வழங்க வேண்டும் என கூறினோம். ஆனால், இதற்கு எவ்வித முயற்சிகளையும் எடுக்கவில்லை. பரிசோதனைகளை, முகாம்களை அதிகப்படுத்த அறிவுறுத்தினோம். பரிசோதனை முடிவுகள் காலதாமதே தொற்று பரவலின் அபாயம் என்றார்.
மேலும், கொரானா தொற்று ஊரடங்கால் 50 ஆயிரம் சிறு குறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 1000 கோடி ரூபாய்கு பணிகளை செய்து கொண்டுள்ளனர். அவை தரமற்றதாக உள்ளதாக குற்றம் சாட்டியவர், மக்கள் வரிப்பணத்தில் நடைபெறும் இந்த பணியில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது என்றார். கடந்த 2016 ம் ஆண்டு முதல், எந்த ஒரு ஒப்பந்த பணிகளும் கோவை மாநகராட்சி இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. இதன் மூலம் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்கள. மறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆணையாளரிடத்தில் கேட்டால், இதுதொடர்பாக, நீதிமன்ற நிலுவையில் உள்ளதால் தகவல் தர இயலாது என்று கூறுகின்றனர். உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி.வேலுமணி வசிக்கும் இந்த மாநகராட்சியில் மட்டும் இது மறைக்கப்பட்டுள்ளது. வெளியிடாததின் மர்மங்கள் என்ன?
கோவை மாநகராட்சி குடிநீர் வினியோக உரிமையை 26 ஆண்டு காலத்திற்கு சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இந்த ஒப்பந்தம் வழங்கப்படுவதற்கு முன்பு மக்களிடம், அல்லது மக்களின் பிரதிநிதிகளிடம் கருத்து கேட்கப்பட்டதா?இந்த ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும் என திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினும் கூறியுள்ளார். இதற்காக பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இந்த ஒப்பந்தத்தை இரத்து செய்யாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
இந்த நிகழ்வுகளில், திமுக சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, வழக்கறிஞர் கேஎம்.தண்டபாணி, டாக்டர்.கோகுல், இரா.க.குமரேசன், உமா மகேஸ்வரி, முரா.செல்வராஜ், மா.செல்வராஜ், மாரிச்செல்வம், கோட்டை அப்பாஸ், கண்ணன், கமல் மனோகரன், ஆனந்த், பொதுக்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் மகுடபதி, சிடிடி ராஜராஜேஸ்வரி, பகுதி கழக பொறுப்பாளர்கள் எஸ்எம்.சாமி, சேதுராமன், மார்க்கெட் மனோகரன், பசுபதி, சிவா, ஷேக் அப்துல்லா, பாலசுப்பிரமணியம், நாகராஜ், சேரலாதன், பத்ரூதீன், மாநில மகளிர் தொண்டரணி துணைச்செயலாளர் மீனா ஜெயக்குமார் மற்றும் அணியின் அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.