கோவையில் கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட பாக்சிங் பயிற்சி மையங்கள் , ஐந்து மாதங்களுக்கு பின் மீண்டும் துவங்கியதால் மாணவர்கள் மீண்டும் மகிழ்ச்சியாக பயிற்சியை துவங்கினர்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொது போக்குவரத்து, சினிமா திரையரங்கம், உடற்பயிற்சி மையங்கள் மூடப்பட்டன. தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்ட நிலையில் செப்டம்பர் முதல் உடற்பயிற்சி மையங்கள் செயல்பட அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து கோவை நேரு விளையாட்டு அரங்கில் செயல்பட்டு வந்த பாக்சிங் மையத்தில் கிருமி நாசினிகள் அடிக்கப்பட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளோடு, 5 மாதத்திற்கு பின் பாக்சிங் வகுப்புகள் துவங்கியது. குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் வகுப்பிற்கு வரும் மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. 5 மாதங்களுக்கு பின் மீண்டும் பாக்சிங் வகுப்புகள் துவங்கியதால் மாணவர்கள் ஆர்வமாக பயிற்சி மேற்கொண்டனர்.
இது குறித்து மாணவர்கள் கூறியதாவது: கொரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லூரி மூடப்பட்டு வீட்டிலேயே இருந்ததாகவும், விளையாட்டு, பயிற்சிகளுக்கு செல்லாததால் மன அழுத்தம் அதிகமானதாகவும், தாற்போது மீண்டும் பாக்சிங் வகுப்புகள் துவங்கியது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தனர்.
இது குறித்து பயிற்சியாளர் கூறும் போது : கொரோனா பரவல் உள்ளதால், தினமும் வகுப்பு கிருமி நாசினிகள் மூலம் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தொற்று பரவாமல் இருக்க அரசின் வழிமுறைகள் முழுமையாக பின் பற்றப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே மாணவர்கள் வரவழைக்கப்படுவதாகவும் இதனால் குழு குழுவாக பிரித்து மாணவர்களுக்கு பயிற்சியளிப்பதாகவும் தெரிவித்தார்..
கோவை செய்தியாளர் பிரசன்னா