ஆசிரியர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கவர்னர், முதல்-அமைச்சர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
நல்ல ஆசிரியர்களால் சிறந்த ஒழுக்கம் கொண்ட, கைதேர்ந்த திறமையுடைய, அறிவாற்றல் பெற்ற மனிதர்களை உருவாக்கித் தர முடியும். ஆசிரியர்களின் விழுமிய அனுபவங்களே மனித வரலாற்றில் வாழ்வையும், ஒளியையும் இணைக்கும் புள்ளிகள் ஆகும். இத்தகைய ஒளி அநேக விளக்குகளை ஒளிரச் செய்யும் கருவியாக உள்ளது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களின் உன்னத முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு, தமிழ்நாட்டில் உள்ள நம் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட வாழ்த்து செய்தியில் .
நாட்டின் வருங்கால தூண்களான மாணவச் செல்வங்களுக்கு அழிவில்லா கல்விச் செல்வத்தை அளிப்பதோடு, ஒழுக்கம், பண்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகிய நெறிகளையும் போதித்து, வளமிக்க அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் அரும்பணியை ஆற்றிவரும் ஆசிரிய பெருமக்களுக்கு இந்நன்னாளில் எனது உளம் கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது வாழ்த்து செய்தியில்,
நாளைய உலகை தாங்கி பிடிக்கும், இளைய தலைமுறை தூண்களான மாணவ-மாணவியரின் சிந்தனையை வளப்படுத்தி, அவர்களது செயலாற்றலை மேம்படுத்தி, வளமும் நலமும் மிக்க புதிய உலகத்தை உருவாக்கிட வழிவகை செய்து தரும் ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் எனக் கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது…
ஆசிரியர் சமுதாயத்திற்காகவும், அவர்களின் நலத்திட்டங்கள் மற்றும் உரிமைகளுக்காகவும் என்றைக்குமே தி.மு.க. பாதுகாப்பு அரணாகத் திகழும் என்று உறுதியளித்து ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ச்சி கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதேபோல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஆசிரியர்தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.