கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல நூறு கோடி ரூபாய்க்கு குளங்கள் மேம்படுத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில் குளங்களில் கலக்கும் கழிவுநீரை தடுக்கவோ அல்லது சுத்தகரிக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கோவை நகரில் நொய்யல் ஆறு பாயும் 9 குளங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூபாய் 377 கோடி மதிப்பில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆனால் இந்தக் குளங்கள் உட்பட கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில் கழிவுநீர் தாராளமாக கலந்து வருகிறது. இதை தடுப்பதற்கு மாநராட்சி சார்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஸ்மார்ட் சிட்டி பணிகள் முடிந்த பிறகும் இந்த குளங்கள் அனைத்தும் மாநகரின் கழிவு நீர் தொட்டியாக இருக்குமோ என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்துள்ளது. சாக்கடை நீர் கலக்கும் குளக்கரையில் எப்படி உலாவருவது, சாப்பிடுவது குளத்தில் எப்படி படகு சவாரி செய்வது என்பது தான் பொதுமக்களின் கேள்விகளாக உள்ளது. இதற்கிடையில் நொய்யல் நதிக்கு புத்துயிர் தருவதாகக் கூறி ரூ.230 கோடி மதிப்பில் தனியாக திட்டம் துவங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நிதியில் கழிவு நீர் கலப்பதை தடுப்பதற்காக எந்த திட்டமும் இல்லை.
கழிவுநீர் கலப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருப்பதாக அரசு தரப்பில் விளக்கம் தரப்படுகிறது. ஆக மொத்தத்தில் நொய்யல் ஆறு மற்றும் குளங்களில் 607 கோடி ரூபாய் செலவிட்ட பின்பு கழிவுநீர் கலப்பது தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ள சுற்றுச்சூழல் அமைப்பினர் கோவை குளங்களில் கழிவுநீர் கலப்பது குறித்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து ஆவணப்படுத்தி உள்ளனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986 பிரிவு 19-ன் படி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திற்கும் புகார் அனுப்பி உள்ளனர். ஸ்மார்ட் சிட்டி திட்டம் மத்திய அரசின் நிதி உதவியுடன் நடப்பதால் கோவை குளங்களை ஆய்வு செய்து சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க மாநகராட்சிக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோவை செய்தியாளர் பிரசன்னா