சென்னை-பூந்தமல்லி, மாங்காடு காவல் நிலைய எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் வீடு புகுந்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேப்பூர் அம்பாள் சிட்டி பகுதியைச் சேர்ந்த சிவராஜா என்பவர் தனது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் டிவி, கேமிரா உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துச் சென்று விட்டதாக பூந்தமல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது போன்ற புகார்கள் அதிகரித்ததை தொடர்ந்து பூந்தமல்லி உதவி ஆணையர் சுதர்சன் தலைமையில் தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். போலீசாரின் தொடர் விசாரணையில் பூந்தமல்லி அம்பேக்தர் நகரைச் சேர்ந்த அப்பு என்கிற அப்பன்ராஜ் இது போன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அப்புவை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து டிவி,கேமிரா, லேப்டாப் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர் மேல் மாங்காடு காவல்நிலையத்திலும் இது போன்ற வழக்கு நிலுவையில் இருப்பதாக போலீசார் கூறுகின்றனர். தனிப்படையில் நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் விஜயராகவன், உதவி ஆய்வாளர்கள் கன்னியப்பன், ரமேஷ் மற்றும் தலைமைக் காவலர் ரவி ஆகியோர் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.