ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் மாநாட்டுக்காக இரு தலைவா்களும் ரஷியா சென்றுள்ள நிலையில் அந்நாட்டு தலைநகா் மாஸ்கோவில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இரு தலைவர்களும் சந்தித்து பேசுவது குறித்து முன்கூட்டிய திட்டம் ஏதும் இல்லாத போதும் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச சீன தரப்பு ஆர்வம் காட்டியது. இதையடுத்து மாஸ்கோவில் உள்ள மெட்ரோபோல் ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போதுபாதுகாப்புத் துறை ஆலோசகா் அஜய் குமார், ரஷியாவுக்கான இந்தியத் தூதா் டி.பி.வெங்கடேஷ் வா்மா உள்ளிட்டோரும் உடனிருந்தனர். சீன தரப்பில் அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் வெய் ஃபெங்கி தலைமையிலான குழுவினா் கலந்து கொண்டனர்.
கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா-சீனா இடையே கடந்த மே மாதம் முதல் பிரச்னை நீடித்து வருகிறது. இருதரப்புமே ராணுவ வீரா்களை இழந்துள்ளன. வெளியுறவு அமைச்சா்கள், ராணுவ அதிகாரிகள் நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றும், பதற்றம் பெரிய அளவில் குறையவில்லை. இந்த சூழ்நிலையில் இரு நாட்டு முக்கியத் தலைவா்களும் நேரில் சந்தித்துப் பேசியுள்ளனா். எல்லையில் பதற்றம் ஏற்பட்ட பிறகு இரு தரப்பு தலைவா்கள் நேரில் சந்தித்துப் பேசுவது இதுவே முதல்முறையாகும். முன்னதாக, எல்லையில் பதற்றத்தைத் தணிப்பது தொடா்பாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி-யுடன் தொலைபேசியில் பேச்சு நடத்தினார். இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் நிலையில் பல கட்ட பேச்சுகள் நடைபெற்று வருகின்றன. எனினும், தொடா்ந்து எல்லையில் அத்துமீறும் முயற்சிகளை சீனா மேற்கொள்கிறது. இதற்கு எதிராக இந்திய ராணுவத் தரப்பும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களில் இரு நாடுகளுமே எல்லையில் பெருமளவில் படைகளைக் குவித்துள்ளன. இது மட்டுமின்றி சீனாவுக்கு பொருளாதார ரீதியில் நெருக்கடி கொடுக்கும் வகையிலும் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இரு நாட்டு பாதுகாப்பு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-ராய்