ஈரோடு மாவட்டம், பவானி அருகில் உள்ள வேதகிரி நகரில் ஊராட்சிக்கோட்டை மலை அமைந்துள்ளது. தொட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்த மலையை சுற்றி பொதுமக்கள் பலர் தமிழக அரசின் வீட்டுமனை பட்டா பெற்று வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை மலையை ஒட்டிய அண்ணாநகர் பகுதியில் மர்ம நபர்கள் சிலர் மலை அடிப்பகுதியில் ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு மண் எடுத்து வருவதாக பவானி வருவாய் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு பவானி வருவாய்த் துறையினர் விரைந்து சென்றுள்ளனர்.
அரசு அதிகாரிகள் வருவதைக் கண்ட மண் எடுக்கும் நபர்கள் ஜெ.சி.பி. இயந்திரத்துடன் தப்பி ஓட்டம் பிடித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஊராட்சிக்கோட்டை மலை பகுதியை அவ்வப்போது மர்ம நபர்கள் சிலர் இயந்திரம் மூலம் மண் எடுப்பதும் அதை வருவாய் துறையினர் தடுப்பதும் வாடிக்கையாகி உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
பவானி செய்தியாளர் கண்ணன்