வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து திண்டுக்கல் பகுதியில் போரிட்டவர் விருப்பாச்சி கோபால் நாயக்கர். இவர் சிவகங்கை இராணி வேலுநாச்சியார், பாஞ்சாலங்குறிச்சி ஊமைத்துரை ஆகியோருக்கு தேவையான பாதுகாப்பும் படை பலத்தையும் வழங்கியவர். கடந்த 15.9. 1801 ஆம் ஆண்டு நாட்டின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்தவர் கோபால் நாயக்கர். அவரின் நினைவாக விருப்பாட்சியில் ரூ.69 லட்சம் மதிப்பீட்டில் கோபால் நாயக்கரின் முழு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்பட்டு தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் கடந்த 2013 ஆம் ஆண்டு காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது.
இன்று அவருடைய 219 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு சுதந்திர போராட்ட வீரர் கோபால் நாயக்கரின் முழு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜ், பழனி கோட்டாட்சியர் அசோகன், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்