ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள சென்னம்பட்டி வனத்துறையினர் மிரட்டிப் பணம் பறிப்பதாக பெண்ணொருவர் வட்டாச்சியரிடம் கொடுத்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தியூர் அருகே உள்ள கோவிலூரைச் சேர்ந்தவர் ராசம்மாள் 64. இவருக்கு சொந்தமாக 20க்கும் மேற்பட்ட ஆடுகள் உள்ளன. இந்த ஆடுகளை மேய்க்க கோவிலூர் வனப்பகுதியில் ஓட்டிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் வனப்பகுதியில் ஆடு மேய்ப்பதற்காக வனத்துறை அதிகாரிகள் பணம் கேட்டு மிரட்டுவதாக பரபரப்பு புகார் ஒன்றை அந்தியூர் வட்டாட்சியர் மாலதியிடம் வழங்கினார்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, வயிற்றுப் பிழைப்புக்காக ஆடு மேய்க்கும் தொழில் செய்து வரும் நான், சென்னம்பட்டி வன சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியின் எல்லையில் ஆடு மேய்த்து வருகிறேன். ஆடு மேய்க்க வேண்டுமென்றால் மாதம்தோறும் பணம் கொடுக்க வேண்டும் என்று சென்னம்பட்டி வனத்துறையினர் என்னை வற்புறுத்தினர்.
இதனால், இரண்டு மாதத்திற்கு ஒருமுறை 1200 ரூபாய் வனத்துறையினருக்கு கொடுத்தேன். இந்த பணம் போதவில்லை என்று கூறிய வனத்துறையினர், இன்னும் அதிகமான பணம் கொடுக்க வேண்டுமென மிரட்டினர்.
பணம் கொடுக்க மறுத்ததால், கடந்த மாதம் என்மீது வனப்பகுதிக்குள் முயல் வேட்டையில் ஈடுபட்டதாக பொய் வழக்கு போட்டு, 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். தொடர்ந்து வனத்துறையினர் என்மீதும், என்னை போன்ற ஆடு மேய்ப்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விடுவேன் என்று மிரட்டி பணம் தரவேண்டும் என்று வறுப்புறுத்துகின்றனர்.
எனவே வனத்துறையினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி வனத்துறை உயர் அதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
ஈரோடு அந்தியூர் செய்தியாளர் எஸ் திருபாலா.