நீலம்பூர் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (60). இவர் கடந்த ஒன்றாம் தேதி அதிகாலை 6 மணியளவில் தனது வீட்டின் அருகில் நடைபயிற்சி மேற்கொண்ட போது, அவினாசி சாலையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் மறைந்து இருந்த நபர் ஒருவர் காளியப்பனை கிரிக்கெட் மட்டையால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றார். அங்கிருந்தவர்கள் காளியப்பனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
சிகிச்சை பெற்று வந்த காளியப்பன் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த காளியப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த சூலூர் போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளியை தேடி வந்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், காளியப்பனை கிரிக்கெட் மட்டையால் தாக்கி கொலை செய்த நபர் அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் ஹரி கிருஷ்ணன் (41) என்பதும், இதற்கு உடந்தையாக காளியப்பனின் மனைவி ராஜாமணி (58) இருந்ததும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து ஹரி கிருஷ்ணனை கைது செய்த போலீசார், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், காளியப்பன் ஹரிகிருஷ்ணன் மனைவியிடம் தவறாக நடக்க முயன்றதும், இதுகுறித்து காளியப்பனிடம் ஹரிகிருஷ்ணன் பலமுறை எச்சரித்தும் காளியப்பன் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தியதும் தெரியவந்தது. மேலும் இது குறித்து ஹரிகிருஷ்ணன் காளியப்பனின் மனைவி ராஜாமணியிம் புகார் தெரிவித்தபோது ராஜாமணி தனது கணவர் இதேபோல பல பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாகவும், தனது கணவர் காளியப்பனை கொலை செய்து விடுமாறும் அதற்கு உரிய சன்மானம் தருவதாகவும் கூறியதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் ஹரி கிருஷ்ணனின் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்தபோது, சம்பவத்தன்று அவர் காளியப்பன் இன் மனைவி ராஜாமணியின் தொலைபேசி எண்ணுக்கு பலமுறை தொடர்பு கொண்டதும் தெரியவந்தது. ஹரிகிருஷ்ணன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொலைச் சம்பவத்திற்கு காளியப்பன் மனைவி ராஜாமணி திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதனை அடுத்து ராஜாமணியையும் போலீசார் கைது செய்து இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை செய்தியாளர் பிரசன்னா