
இதற்கான உத்தரவு சனிக்கிழமை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து உணவகங்களையும் திறக்க கடந்த ஜூன் 8-ஆம் தேதியன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உணவகங்களை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஏ.சி. வசதியில்லாமல் இயக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டுமெனவும், 50 சதவீத இருக்கைகளை மட்டுமே அனுமதிக்க வேண்டுமெனவும் தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், மத்திய அரசு வகுத்துள்ள விதிமுறைகளின் படி தமிழகத்தில் ஏசி வசதியுடன் உணவகங்கள் செய்பட ஏதுவாக தமிழக அரசின் உத்தரவில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என தமிழக வருவாய் நிர்வாக ஆணையாளா் பணீந்திர ரெட்டி அரசுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். அதை ஏற்ற தமிழக அரசு தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்கள் ஏசி வசதியுடன் செயல்படலாம் என தனது உத்தரவில் திருத்தம் செய்து அறிவித்துள்ளது. அதே சமயம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி உணவகங்கள் செயல்பட வேண்டும் என்றும் தமிழக அரசு தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.