கொரோனோ வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கோயில்களில் பக்தர்கள் சாமி கும்பிட அனுமதிக்கப்படவில்லை . இந்நிலையில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. அதில் கடந்த 1ம் தேதி முதல் பக்தர்கள் கோயில்களில் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்ற அறிவிப்பும் வெளியானது. இந்நிலையில் ஒன்றாம் தேதிக்கு பிறகு இன்று தமிழர்களின் முக்கிய விரதங்களில் ஒன்றான ஆவணி ஞாயிற்றுக் கிழமையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அம்மன் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல் புதுக்கோட்டையில் பிரசித்திபெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அப்போது கோயிலுக்குள் செல்லும் பக்தர்களுக்கு உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட்டு கிருமிநாசினி வழங்கப்பட்டு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். பல மாதங்களுக்குப் பிறகு கோவில் வாசலில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பொருட்களை வாங்கிச் சென்றனர்.
புதுக்கோட்டை செய்தியாளர் கிருஷ்ணமூர்த்தி