திண்டுக்கல்லில் உள்ள வேணு பிரியாணி ஹோட்டலில் சமூக இடைவெளி மற்றும் நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
செப்டம்பர் மாதம் முதல் பொதுமுடக்கத்தில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளன. அதற்கு முன்பாகவே ஜூலை மாதம் முதலே உணவகங்கள் திறந்து கொள்ளலாம் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் உணவகங்கள் திறந்திருக்கலாம் என்றும், ஏசி வசதி இருக்கக் கூடாது என்றும் உணவகங்களில் அமர்ந்து உணவருந்த கூடாது என்றும் தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது. தற்போது உணவகங்களில் பொதுமக்கள் அமர்ந்து உணவு அருந்தலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல்லில் உள்ள பிரபல உணவகங்களில் பொது மக்கள் கூட்டம் குவியத் தொடங்கியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் விலக்கி கொள்ளப்பட்டதால் உணவகங்களுக்கு வரும் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக அசைவ உணவகங்ளுக்கு காலை முதலே பொதுமக்கள் அதிகளவில் வரத் தொடங்கினர். இந்நிலையில் திண்டுக்கல்லில் உள்ள பிரபலமான பிரியாணி உணவகமான வேணு பிரியாணி ஹோட்டலில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால் இங்கு தமிழக அரசு அறிவித்துள்ள நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளான சமூக இடைவெளி பின்பற்றப்படுவது, முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுவது போன்ற தமிழக அரசின் உத்தரவுகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. உணவருந்த வரும் பொதுமக்களிடம் சமூக இடைவெளியை பின்பற்றுமாறும் முக கவசம் கட்டாயம் அணியுமாறும் ஹோட்டல் நிர்வாகத்தினர் வலியுறுத்தி தவறினர். இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது முறையான பதில் சொல்லாமல் தாங்கள் கல்லா கட்டுவதிலேயே குறியாக இருந்தனர் ஓட்டல் நிர்வாகத்தினர். உலகம் முழுவதும் நோய்த்தொற்று கடுமையான உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்தியாவிலும் தமிழகம் முழுவதும் மத்திய மாநில அரசுகள் நோய் பரவலை தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. கொரோனா நோய் தொற்று பரவலால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு வேணு பிரியாணி ஹோட்டல் போன்ற உணவக உரிமையாளர்கள் நோய்த்தொற்று பரவல் குறித்த பயம் இல்லாமல் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காமல் இருப்பதால் நோய்த்தொற்று மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை
-ராய்