இரு நாட்களில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை 180 பேரிடம் நடத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு குறித்து அரசு அதிகாரிகளுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசானை மேற்கொண்டார். கூட்டத்திற்குப் பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது
தமிழக முதல்வர் நேரடியாக களத்திற்கு சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும்,
மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகளை முதல்வர் அறிவித்துள்ளார் என்றும் கூறினார்.
இதன் பிறகுதான் பொது மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் முகக்கவசம் அணிந்து தான் வெளியே வர வேண்டும் மேலும் சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர்,
அரசு உத்தரவுகளை கடைப்பிடிக்காதவர்களுக்கு 200 ரூபாய் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் எச்சரித்தார்.
இது பொதுமக்களை தண்டிப்பதற்காக அல்ல விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தான் என்றும் விளக்கமளித்த அமைச்சர், பொதுமக்களுக்கு காய்ச்சல் சளி இருமல் வயிற்றுப் போக்கு ஆகியவை இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவிலேயே அதிகபட்சமாக RTPCR பரிசோதனை தமிழகத்தில் தான் செய்யப்படுகிறது என்றும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தமிழகத்தில் ஒரு லட்சத்து 28 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறினார். மேலும் கொரானா தடுப்பு மருந்து தற்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து பரிசோதனைக்காக தமிழகத்திற்கு வந்துள்ளதாகவும், ஓரிரு நாட்களில் 180 பேருக்கு இந்த பரிசோதனை ஆய்வு தொடங்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
புதுக்கோட்டை செய்தியாளர் கிருஷ்ணமூர்த்தி