தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.
கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, மெட்ரோ ரெயில் சேவை நாடு முழுவதும் இன்று முதல் தொடங்கியது. சென்னையிலும் வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலான வழித்தடத்தில் சுமார் 5 மாதங்களுக்கு பிறகு இன்று காலை 7 மணிக்கு மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது. அரசு குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இரவு 8 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளன . மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்த தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், விமான நிலையம் ரெயில் நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை ரெயில் நிலையம் வரை பயணம் செய்தார். அவருடன் மெட்ரோ ரெயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் பிரதீப் யாதவ் மற்றும் மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் பயணம் செய்தனர்.
விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான நீலநிற வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் இயங்க தொடங்கியது. செப். 9 ஆம் தேதி முதல் சென்ட்ரலிருந்து கோயம்பேடு வழியே ஏர்போர்ட்டுக்கு பச்சை நிற வழித்தடத்தில் ரெயில் இயக்கப்பட உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதத்தில் செல்போன் செயலி மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுப்பது ஊக்குவிக்கப்படும் என்றும் தவிர்க்க முடியாது சமயத்தில் சுத்தம் செய்த டோக்கன் வழங்கப்படும் என்றும் மெட்ரோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய காற்று செல்லும் பாதைகளில் புறஊதா கதிர்கள் மூலம் கிருமிகள் அழிக்கப்படுகின்றன. தொடர்ந்து பிளாட்பாரத்திற்கு செல்லும் வழியில் உள்ள தானியங்கி கதவுகள் அருகில் நீண்ட வரிசையில் பயணிகள் நிற்பதை தவிர்ப்பதற்காக, நாட்டிலேயே முதன் முறையாக சென்னையில் உள்ள 32 ரெயில் நிலையங்களில் உள்ள தானியங்கி கதவுகளில், பயண அட்டையை பரிசோதிக்கும் கருவி கார்டு ரீடர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் நோய் தொற்று ஏற்படாமல் டிக்கெட் கவுண்ட்டர்களில் இருந்து விரைவாக பிளாட்பாரத்துக்கு பயணிகள் செல்ல முடியும். கூட்ட நெரிசலை தவிர்ப்பது, சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ரெயில் நிலையங்களிலும் 5 முதல் 10 பணியாளர்கள் வரை கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு லட்சத்து 16 ஆயிரம் பயணிகள் நாள் ஒன்றுக்கு பயணம் செய்தனர். தற்போது நோய் தொற்று காரணமாக பலர் வீடுகளில் இருந்தப்படியே பணியாற்றி வருகின்றனர். இதனால் கூட்டம் அதிகம் வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று கருதப்படுகிறது.
அலுவலக நேரமான காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலான நேரத்தில் 5 நிமிட இடைவெளியில் ஒரு ரெயிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் ஒரு ரெயிலும் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 43 ரெயில் சேவைகள் இயக்கப்படுகிறது. பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஏறி, இறங்க வேண்டியிருப்பதால் ரெயில் நிலையங்களில் 20 வினாடிகளுக்கு பதில் 50 வினாடிகள் ரெயில்கள் நிறுத்தப்படுகிறது.
-ராய்