கர்நாடா மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொல்லையால் வேலையை உதறிவிட்டு அரசு மருத்துவர் ஒருவர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். இதுபற்றி அறிந்த அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்ரீராமுலு, பணிக்கு திரும்பும்படி அந்த மருத்துவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தில் உள்ள பிம்ஸ் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி நிபுணராக டாக்டர் ரவீந்திரநாத் பணியாற்றி வந்தார். இவரது சொந்த ஊர் தாவணகெரே மாவட்டம் பாட கிராமம். அந்த மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வார்டில் தினமும் பணியாற்றுமாறு ரவீந்தர்நாத்தை அதிகாரிகள் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் உயரதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர் கட்டாய விடுப்பில் அனுப்பிவைக்கப்பட்டார். விடுப்பு முடிந்து மீண்டும் பணிக்கு திரும்பிய அவரை மறுபடியும் கொரோனா வார்டில் பணிபுரியுமாறு அதிகாரிகள் நிர்பந்தித்துள்ளனர். இதனால் ரவீந்திரநாத் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார். தொடர்ந்து தனது சொந்த கிராமத்திற்கு குடும்பத்தோடு இடம்பெயர்ந்த அவர் தற்போது ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். தனது ஆட்டோவின் முன்புறத்தில் ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்து தொல்லை கொடுப்பதாக எழுதி வைத்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த கர்நாடக சுகதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு ரவீந்தர்நாத்தை தொடர்பு கொண்டு விசாரணை செய்துள்ளார். மேலும் தன்னை நேரில் வந்து சந்திக்குமாறு கூறியதோடு, மீண்டும் பணியில் சேருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
-ராய்