திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு
இன்று(07.09.2020) நடைபெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழாவில், மாவட்ட
ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் மாவட்டத்தில் சிறப்பாக
பணிபுரிந்த 11 ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கி, கெளரவித்தார்
கல்வியறிவு பெற்ற சமுதாயத்தை உருவாக்கிட வேண்டும் என்ற உயர்ந்த
லட்சியத்தோடு ஆசிரியராய் பணியை தொடங்கி, தனது அயராத உழைப்பால் இந்திய நாட்டின்
குடியரசுத் தலைவராக உயர்ந்த தத்துவ மேதை டாக்டர் எஸ்.இராதாகிருஷ்னணன் அவர்களை
சிறப்பிக்கும் வகையில் அன்னாரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதி ஆண்டுதோறும்
“ஆசிரியர் தினமாக” கொண்டாடப்பட்டு வருகிறது.
“எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என்ற கொன்றை வேந்தன் பாடலில்
ஒளவையார், உடலுக்கு கண்கள் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதேபோன்று
ஒருவனது வாழ்க்கைக்கு எண்ணும் எழுத்தும் இரண்டு கண்கள் போன்றது என்று கல்வியின்
சிறப்பினை போற்றுகிறார். அத்தகைய சிறப்புமிக்க கல்விச் செல்வத்தை மாணாக்கர்களுக்கு
போதிக்கும் ஆசிரியப் பெருமக்கள் “எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” என்று
தெய்வநிலைக்கு ஒப்பாக போற்றப்படுகிறார்கள்.
தமிழ்நாடு அரசு, அறப்பணியான ஆசிரியப் பணியினை அர்ப்பணிப்பு உணர்வோடு
ஆற்றிவரும் நல்லாசிரியர்களுக்கு “டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது” வழங்கி சிறப்பித்து
வருகிறது. சிறந்த முறையில் கணினியை பயன்படுத்தி மாணவர்களுக்கு பயிற்றுவித்தல், கல்வி
இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்குதல், குழந்தைகள் சேர்க்கை மற்றும் பள்ளி
மேலாண்மையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு “கனவு ஆசிரியர்” போன்ற சிறப்புமிக்க
விருதுகளை தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கி ஆசிரியப் பெருமக்களை கௌரவித்து
வருகிறது.
இந்தாண்டு நமது மாவட்டத்தில் 11 ஆசிரியர்கள் சிறந்த ஆசிரியர்களுக்கான
விருதினை பெருவது பெருமைக்குரியது. அதே போல் வருங்காலங்களில் இன்னும் அதிக
அளவில் ஆசிரியர்கள் இந்த பெருமைக்குரிய விருதினை பெறவேண்டும்.
எனது ஆசிரியர்கள் என்னை ஊக்குவித்ததால்தான் நான் நன்றாக படித்து இன்று
உங்கள் முன்னால் மாவட்ட ஆட்சித்தலைவராக இருக்கிறேன். அதே போல் ஒவ்வொரு
ஆசிரியரும் மாணவர்களுக்கு ஊக்கம் அளித்து அவர்களை சமுதாயத்தில் ஒரு உயர்ந்த
இடத்தை அடைவதற்கு நீங்கள் உறுதுணையாக இருந்து, அவர்களுக்கு நல்ல முறையில்
கல்வி கற்பித்து வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என ஆசிரியப்
பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட
ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.