பாரத பிரதமரின் ஏழை விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தில் தமிழகம் முழுவதும் மெகா மோசடிகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த மோசடியில் ஒவ்வொறு மாவட்டத்திலுள்ள வேளாண் அதிகாரிகள் உடந்தையாக செயல்பட்டிருப்பதாக அறியப்படுவதால் அவர்களுக்கு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் கிடுக்கிப்பிடி போட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த தில்லாலங்கடி மோசடிகள் அம்பலமாகியிருக்கும் நிலையில் தற்போது கன்னியாகுமரி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் பா.ஜ.க.பிரமுகர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்திருக்கிறார்கள்.
விவசாயிகளுக்கான பிரதம மந்திரி நிதியுதவி திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 9.5 கோடி விவசாயிகள் பயன்பட்டு வருகிறார்கள் நான்கு மாதத்திற்கு ஒரு முறை ரூ.2000 என்று ஆண்டுக்கு ரூ. 6000 விவசாயிகளுக்கு வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
விவசாயிகளுக்கு கிடைக்கக்கூடிய நிதி நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படுவதுதான் இத்திட்டத்தின் சிறப்பு. அதன்படி இத்திட்டத்தின்கீழ் தமிழகத்தில் மட்டும் ஏறத்தாழ 40 லட்சம் விவசாயிகள் பயன்பட்டு வருகிறார்கள்.
இப்படிப்பட்ட அற்புதமான திட்டம் நலிவுற்ற விவசாயிகள் தங்களுடைய விவசாய பணிகளை மேற்கொள்ளவும், எவ்வித இடர்பாடுமின்றி விவசாய நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இணையதளத்தில் பதிவு செய்ய அரசு மேற்கொண்டுள்ள வழிகளை, சிலர் அதிகாரிகளின் உடந்தையுடன் தவறுதலாக கையாண்டு அரசாங்கத்தை ஏமாற்றி விவசாயிகள் அல்லாதவர்களுக்கு இந்த உதவி தொகையை பெற்றுத் தருகிறார்கள் என்பது அதிர்ச்சி தரக்கூடிய விஷயமாகும்.
நலிவுற்ற விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டத்தை சிலர் குறுக்கு வழியில் மோசடி செய்து இந்த நிதியை பயன்படுத்துவது மிகப்பெரிய குற்றம் என்று தெரிந்தும் இதில் புகுந்து விளையாடியிருக்கிறார்கள்.
இந்நிலையில், இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பயன் பெறுவோர் பற்றிய கணக்கெடுப்பை மாநில அரசு மிகத்தெளிவாக பரிசீலனை செய்து இந்த தொகையை உரிய விவசாயிகளுக்கு கிடைக்கிறதா அல்லது பல இடங்களில் இதுபோன்ற மோசடிகள் நடைபெற்று இருக்கிறதா என்று ஆராய வேண்டும் என்று பா.ஜ.க. கருதுகிறது.கன்னியாகுமரி மாவட்டம்.
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி கன்னியாக்குமரி பாரதிய ஜனதா கட்சி சார்பாக தலைவர் டி.ஆர்.எல் முருகன், பொதுச் செயலாளர் வினோத். விவசாய அணி துணை தலைவர்கள் தங்கராஜ். ரவீந்திரன். செயலாளர் அருள். பொருளாளர் பிஜேபி கவுன்சிலர் மாரிமுத்து. மற்றும் சிறப்பு விருந்தினர் மாநிலச் செயலாளர் உமாரதி ராஜன் அவர்களும் நிர்வாகிகளும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.வேலூர் மாவட்டம்.
அதே போல் தமிழகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகையில் முறைகேடு பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் சி.பி,ராதாகிருஷ்ணன் ஆட்சியர் அ.சண்முக சுந்தரம் இ.ஆ.ப.அவர்களிடம் மனு அளித்தார். அவருடன் மாவட்டத்தலைவர்கள் வெங்கடேசன்,தசரதன் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.
மனு அளித்த பின்னர் சி.பி.,ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய அரசும் பிரதமர் மோடியும் இந்தியா முழுவதும் விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்பதற்காக ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் உதவி தொகை வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தினார்.
இந்த திட்டத்தில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் முறைகேடுகள் நடந்துள்ளது இதனை செய்த அனைவரின் மீது அரசியல்வாதிகள் மீதும் அதிகாரிகளின் மீதும் யார் முறைகேடு செய்திருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்வரிடமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம்.
புதிய கல்வி கொள்கை திட்டத்துக்கு தமிழக அரசு குழு அமைத்துள்ளது நாங்கள் தாய் மொழியில் கல்விபயில வேண்டுமென வலியுறுத்துகிறோம் இந்த கல்வி திட்டத்துக்கு பொதுமக்களிடம் வரவேற்புள்ளது. ஆனால் திமுக கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் பாஜக அ.தி.மு.க கூட்டணியில் தான் தொடர்கிறது.
கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாஜக கட்டாயம் போட்டியிடும் என்று கூறினார்.
ஏழை விவசாயிகளின் பெயரில் கோடிகளை சுவாகா செய்த அதிகாரிகளால் மாநில அரசுக்கு வீண் பழி வந்திருக்கிறது என்பதை மறுக்க இயலாது.
சட்டம் அதன் கடமையை செய்யட்டும்.