ஈரோடு மாவட்டம் வரட்டுப்பள்ளம் அணை ஒட்டிய பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை கொட்டியதால் எண்ணமங்கலம் ஏரிக்குச் செல்லும் கால்வாயில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
அந்தியூர் மற்றும் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒருவாரத்திற்கு மேலாக மிதமானது முதல் ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக அந்தியூர் வரட்டுப்பள்ளம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இன்று மதியம் 3 மணி வரையில் உஷ்ணம் அதிகமாக காணப்பட்ட நிலையில், அதற்குப் பிறகு திடீரென மழை கொட்ட ஆரம்பித்தது.
வரட்டுப்பள்ளம் அணை மலைப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக, வரட்டுப்பள்ளம் அணை அருகே உள்ள குரும்பபாளையம் மேடு பள்ளத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இப்பள்ளத்தில் கரைபுரண்டோடும் வெள்ளம் எண்ணமங்கலம் ஏரியைச் சென்றடைகிறது.
வெளுத்து வாங்கிய மழையால், அரை மணி நேரம் குரும்பபாளையம் மேடு தரைப் பாலத்தை கடக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதேபோல் பர்கூர் மலைப் பகுதியான தேவர்மலை சுற்று வட்டாரப் பகுதிகளிலும் பெய்த கனமழை காரணமாக, மேட்டூர் அணைக்கு செல்லும் கால்வாயில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. கனமழையினால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு அந்தியூர் செய்தியாளர் எஸ் திருபாலா