ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒன்றியம், மைக்கேல்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட, பாலக்குட்டையில் இரண்டு மின் கம்பங்களுக்கு இடையில் செல்லும் இரு மின் வயர்களை சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும், தவறும் பட்சத்தில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என சிபிஎம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஓடைமேடு அருகில் உள்ள பாலக்குட்டையில் வசிக்கும் காளியம்மாள், மாதம்மாள், கருப்புச்சாமி, செங்கோடு, அம்மாசை ஆகியோர் வசிக்கும் வீடுகளின் மேல் பகுதியில், மின் கம்பங்களுக்கு இடையில் செல்லும் மின் வயர்கள் வீட்டை தொட்டு செல்லும் நிலையில் உளளது.
காற்று, மழை காலம் நெருங்கிவிட்டதால், எப்போதும் வேண்டுமானாலும் அறுந்து விழும் சூழ்நிலையில், இப்பகுதியில் வசிப்போர் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
இது மிகவும் அவசர அவசியமாக செய்யவேண்டிய முக்கியமான பணியாகும் என்பதால், தமிழ்நாடு மின்சார வாரியம் உடனடியாக நேரில் பார்வையிட்டு சரிசெய்து மக்கள் அச்சத்துடன் வாழும் நிலையை போக்க வேண்டும் என சிபிஎம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் திங்கட்கிழமை (14.9.2020) சம்பந்தபட்ட மக்களை அழைத்துக் கொண்டு மின்வாரிய அதிகாரிகளிடம் நேரில் முறையிடப்படும் எனவும், தாமதமாகும் பட்சத்தில் ஜனநாயக ரீதியில் மக்களை திரட்டி போராடவும் தயாராவோம் என பாலக்குட்டை சிபிஎம் கிளைச் செயலாளர் செங்கோடன் தெரிவித்தார்.
ஈரோடு அந்தியூர் செய்தியாளர் எஸ் திருபாலா