பேரூர் அடுத்த சென்னனூரை சேர்ந்த கோவிந்தராஜ்(28) சொந்தமாக வெல்டிங் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இதே பகுதியை சேர்ந்த இளங்கலை மூன்றாமாண்டு படித்து வரும் மஞ்சுளா(20) வை கோவிந்தராஜ் 4 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த, 4ம் தேதி, பெற்றோரை எதிர்த்து இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். மூன்று நாட்களாக, இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த, 7ம் தேதி, மஞ்சுளாவின் பெற்றோர், பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் கோவிந்தராஜ் மற்றும் மஞ்சுளாவை அழைத்து விசாரித்தனர். அப்போது மஞ்சுளாவின் பெற்றோர் மஞ்சுளாவிடம் ஒரு மணி நேரம் பேசி சமாதானப்படுத்தி , மஞ்சுளா, கணவனுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என காவல் துறையிடம் எழுதி கொடுத்துவிட்டு பெற்றோருடன் சென்றுள்ளார்.
இதனையடுத்து , திருமணமான மூன்று நாட்களில் மனைவியை பிரிந்த சோகத்தில் இருந்த கோவிந்தராஜ் வீட்டிற்கு வந்த மஞ்சுளாவின் பெற்றோர்கள் திட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பேரூர் போலீசார், வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவிந்தராஜன் உடல் பிரேத பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கோவிந்தராஜ் தற்கொலைக்கு காரணமான மஞ்சுளாவின் பெற்றோர்கள் மீது பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அதுவரை, கோவிந்தராஜின் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி, அவரது உறவினர்கள், மாலை 7 மணியளவில் கலெக்டர் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சாலையில் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து செல்ல அறிவுறுத்தினர். திடீரென, சாலை மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தன்னுடைய மகனின் இறப்புக்கு நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர்கள் கூறிச்சென்றனர்.