
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு 8 மாதங்கள் உள்ள நிலையில் தற்போதே அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இந்நிலையில் கோவையில் குனியமுத்தூர்,டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடர வேண்டும் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. நேதாஜி சுபாஷ் சேனை தமிழ்நாடு என்ற பெயரில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா,துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோரின் படங்களுடன் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ‘எடப்பாடியாரை புறம் பேசுபவர்கள் இதைப் படித்த பின்னராவது திருந்தட்டும்’ என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் திட்டங்களை பட்டியலிட்டுள்ளனர். மேலும் ‘இவை ஒரு சிலவே, பட்டியலிட்டால் கணக்கிலடங்காது. மக்களின் முதல்வர் எடப்பாடியாரைக் குறை சொன்னால் நாக்கு அழுகிவிடும். என்றும் மீண்டும் எடப்பாடி, வேண்டும் எடப்பாடி’ என போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.