தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் திரு. T. பிள்ளைமுத்து (58) அவர்கள் நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இவர் 1988ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் சிறப்பாக பணியாற்றி உயரதிகாரிகளின் பாராட்டுக்களையும், வெகுமதிகளையும் பெற்று பதவி உயர்வுகள் பெற்றவர்.
இவருக்கு ராமலெட்சுமி (49) என்ற மனைவியும், பாலமுருகன் (30) என்ற மகனும், தங்கலெட்சுமி (27) என்ற மகளும் உள்ளனர். இன்று (11.09.2020) இவரது உடல் சொந்த ஊரான கட்டாலங்குளம் புதூரில் உடல் தகனம் செய்யபட உள்ளது.
இவரது இறுதிச்சடங்கில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.ஜெயக்குமார் அவர்கள் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். இதில் உற்றார், உறவினர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.