திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் முழுவதும் சாலை விரிவாக்கப்பணி நடைபெற்றுவருகிறது. இதன் காரணமாக முக்கிய சாலைகள் அனைத்தும் பள்ளம் தொண்டப்பட்டு உள்ளது. இதனை அடுத்து பணிகள் நடைபெற்றுவரும் சாலைகளில் உள்ள கடைகளுக்கு சென்றுவருவதற்கு ஏதுவாக கடைக்காரர்கள் சார்பில் இரும்பிலான படிகள் மற்றும் கிரில்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பழனி பேருந்துநிலையம் அருகே உள்ள ரயில்வே பீடர் ரோடு, திண்டுக்கல் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள் முன்பு வைக்கப்பட்டுள்ள இரும்பு கிரில்கள் மற்றும் படிகளை மர்மநபரகள் இரவோடு இரவாக திருடிச்சென்று விட்டனர்.
கடைகள் முன்பு வைக்கப்பட்டிருந்த இரும்பு கிரில்களை மர்மநபர்கள் திருடி நான்கு சக்கர வாகனத்தில் ஏற்றிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. ஒவ்வொரு இரும்பு படிகளும் சுமார் நான்காயிரம் ரூபாய் முதல் ஆறாயிரம் ரூபாய் வரை மதிப்புள்ளது என்றும், சுமார் பத்திற்கும் மேற்பட்ட கடைகள் முன்பு வைக்கப்பட்டிருந்த இரும்பு கிரில்களை மர்மநபர்கள் திருடிச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.