கோவை வெள்ளலூர் அடுத்த கோண வாய்க்கால் பாளையம் கருப்பராயன் கோவில் தெருவை சேர்ந்த தம்பதியினரின் 17 வயது மகள் சம்பவத்தன்று வீட்டிலிருந்து திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிறுமியை தேடி வந்த நிலையில் சிறுமியை பழைய தாராபுரம் ரோடு, பழனி காந்திபுரத்தை சேர்ந்த விக்னேஷ்(23) என்பவர் கடத்தி சென்று திருமணம் செய்தது தெரியவந்தது. சிறுமியின் வீட்டுக்கு அருகில் விக்னேஷ் வெல்டிங் வேலை செய்து வந்த போது சிறுமிக்கும் விக்னேஷ் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து திருமண ஆசை வார்த்தை கூறி விக்னேஷ் சிறுமியை பழனிக்கு அழைத்து சென்று திருமணம் செய்துள்ளார்.
இது குறித்த தகவலை பழனி போலீஸார் கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் இளம் ஜோடி ஒருவர் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்திற்கு வந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து போத்தனூர் போலீஸார் விக்னேஷ் மற்றும் சிறுமியை மீட்டு கோவைக்கு கொண்டு வந்த போலீஸார் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.