ஈரோடு மாவட்டம் பவானியிலிருந்து அந்தியூர் சென்று கொண்டிருந்த அரசு பஸ்ஸை இயக்கிக் கொண்டிருந்த ஓட்டுனருக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டதால், எதிரே நின்று கொண்டிருந்த கார் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.
அந்தியூர் அடுத்த வெள்ளித்திருப்பூரை சேர்ந்தவர் தர்மசிவன், 42. இவர் அந்தியூர் அரசு போக்குவரத்து கழக கிளையில் ஓட்டுனராக பணிபுரிகிறார்.
இன்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்தவர், அந்தியூரில் இருந்து பவானி வழித்தடத்தில் செல்லும் பி 18 பேருந்தை இயக்கினார். இன்று மதியம் பவானியில் இருந்து அந்தியூர் வந்து கொண்டிருந்த போது, பருவாச்சி என்ற இடத்தில் பயணிகளை இறக்கி விட பேருந்தை நிறுத்தினார். மீண்டும் பேருந்தை இயக்க தொடங்கியபோது, திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனால் இவரது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, 30 அடி தூரத்தில் நின்று கொண்டிருந்த கார் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் வாகனங்களுக்கு சிறிய அளவிலான சேதம் ஏற்பட்ட நிலையில், வலிப்பால் அவதிப்பட்ட ஓட்டுநர் தர்ம சிவனை உடனடியாக அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு, மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சிகிச்சையில் இருக்கும் ஓட்டுநர் நலமுடன் இருப்பதாக அந்தியூர் போக்குவரத்து கிளை மேலாளர் கூறினார். அரசு பேருந்து ஓட்டுனர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு அந்தியூர் செய்தியாளர் எஸ் திருபாலா.