செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகனுக்கு மேளதாளம் முழங்க அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருமண மண்டபத்திற்கு வரும் வழியிலும், திருமண மண்டபம் முன்பாகவும் எல்.முருகனுக்கு பா.ஜ.க வினர் வரவேற்பு அளித்தனர்.திருமண மண்டபம் முன்பாக கிராமிய நடனங்கள் ஆடியும், இரு புறமும் பெண்கள் மலர் தூவியபடியும் முருகனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரவேற்பினை ஏற்றுக்கொண்ட பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் திருமண மண்டபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது
புதிய கல்வி கொள்கை தாய் மொழி கல்வியும், தொழில் கல்வியையும் ஊக்குவிக்கின்றது எனவும் , தமிழகத்தில் சிபிஎஸ்சி, மெட்ரிக் பள்ளிகளில் ஏற்கனவே மும்மொழி கல்வி இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.அரசுபள்ளிகளில் மட்டும்தான் மும்மொழி கல்வி இல்லை எனவும், தாழ்த்தப்பட்ட, ஏழை,எளிய மாணவர்களுக்கு இன்னொரு மொழி படிக்கும் வாய்ப்பு இல்லாமல் போகின்றது எனவும் தெரிவித்தார். ஆனால் மும்மொழி கல்வியை எதிர்த்து
நவீன தீண்டாமையை திமுக தலைவர் ஸ்டாலின் பின்பற்றுகின்றார் எனவும்,
திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் மும்மொழி கல்வி நடத்தப்படுகின்றது எனவும் முருகன் தெரிவித்தார்.
கருப்பர் கூட்டத்தின் செயலை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டது எனவும்,
கருப்பர் கூட்டத்தின் நிர்வாகி செந்தில்வாசன் திமுக ஐ.டி குழுவை சேர்ந்தவர் எனவும் தெரிவித்த முருகன்,
திமுக தலைவர் ஸ்டாலின் இது குறித்து விளக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.கிஷான் திட்டம் விவசாயிகள் பயன் பெறும் திட்டம் என தெரிவித்த அவர் , இதில்
ஏற்பட்டு இருக்கும் முறைகேடுகள் குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து தமிழக அரசு விசாரிக்க வேண்டும் எனவும்,அனைத்து மாவட்டங்களிலும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.அரசு அதிகாரிகள் , தனியார் நெட் சென்டர் உதவியுடன் இந்த முறைகேட்டை செய்து இருக்கின்றனர் எனவும் முருகன் குற்றம் சாட்டினார்.
தமிழக பா.ஜ.க சட்டசபை தேர்தலுக்கும், கன்னியாகுமரி இடைதேர்தலுக்கும் தயாராக இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார். ஏழை, எளிய மாணவர்களுக்கு இன்னொரு மொழி படிக்க வாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும் எனவும், மும்மொழி கல்வி தேவை எனவும் கூறினார்.
பல்வேறு கட்சியில் இருந்து பா.ஜ.கவில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர் எனவும், திமுகவில் இருந்து பல தலைவர்கள் பா.ஜ.க வில் இணைய இருக்கின்றனர் எனவும் ,தேசிய ஜனநாயக கூட்டணி நல்லபடியாக போய் கொண்டு இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.கிஷான் திட்டத்தில் நடந்த முறைகேடுகளுக்கு தமிழக அரசுதான் பொறுப்பு எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
திமுகவில் பட்டியல் இனத்தினர் புறக்கணிக்கபடுகின்றனர் என கூறிய அவர், ஆ.ராசாவால் பொருளாளர் பதவிக்கு போட்டியிட கூட முடியவில்லை எனவும் தெரிவித்தார்.மாணவர் தற்கொலை பல்வேறு காரணங்களுக்காக நடைபெறுகின்றது எனவும்,நீட் தேர்விற்கு மாணவர்கள் தயாராகவேண்டும் எனவும் வலியுறத்தினார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் 75 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை பா.ஜ.க தனித்து போட்டியிட்டு நிர்ணயித்து இருந்தது எனவும் எல்.முருகன் தெரிவித்தார். முருகனை வரவேற்கும் விதமாக திருமண மண்டபம் முன்பாக சாலையில் ஏராளமான கட்சி கொடிகள் கட்டப்பட்டு இருந்தது.