கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நகராட்சி நிர்வாக ஆணையர் முனைவர்.கா.பாஸ்கரன் அவர்கள் தலைமையில் கொரோனா நோய் தொற்று தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் கோவை மாநகராட்சியிலுள்ள 5 மண்டலங்களில் ஒவ்வொரு மண்டல வாரியாக கொரோனா தொற்று பரவுதலை தடுப்பதற்காக என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும், மண்டல வாரியாக நடைபெற்று வரும் மருத்துவ முகாம்களில் மருத்துவ பரிசோதனை செய்து, தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனை, ESI மருத்துவமனை, கொடீசியா மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்படும் முறைகள் குறித்தும், நோய் தொற்று பரவாமல் தடுக்கும் முறைகள் குறித்தும், நோய் கண்டறியும் நடைமுறைகளும் ஆய்வு செய்யப்பட்டன.
இதுதவிர கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், உணவகங்கள், பேக்கரி, மருந்து கடைகள் உட்பட அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா எனவும், அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், தவறும்பட்சத்தில் அபராதம் வசூலிக்கவும் அறிவுறுத்தினர்.
இந்த ஆய்வு கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலா் பெ.குமாரவேல் பாண்டியன், துணை ஆணையாளர் எஸ்.மதுராந்தகி, அனைத்து மண்டல உதவி ஆணையார்கள், நகர்நல அலுவலர் ராஜா, துணை இயக்குநர் சுகாதார பணிகள் ரமேஷ்குமார் மற்றும் தொடா்புடைய அலுவலா்கள் கலந்து கொண்டனர்.