நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று நடக்கிறது. தமிழகம் முழுவதும் சுமார். 1.17 லட்சம் மாணவ, மாணவியர் நீட் தேர்வை எழுத உள்ளனர். அதில் கோவை மாவட்டத்தில் மட்டும் 10 ,627 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக கோவையில் மொத்தம் 14 இடங்களில், 16 மையங்கள் அமைக்பப்பட்டுள்ளன. தேர்வானது மதியம் 2 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது.
நீட் தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு அறையிலும் 12 மாணவ, மாணவிகள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த தேர்வை கண்காணிக்க ஒரு தேர்வு அறைக்கு இரு கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்னர். தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் காலை 11 மணிக்குள் தேர்வு எழுதும் மையத்திற்கு வர வேண்டும். பின்னர் 11.30 மணி அளவில் மையத்தின் உள்ளே ஒருவர் பின் ஒருவராக அனுமதிக்கப்படுவார்கள்.
அங்கு அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். இதில் அதிக உடல் வெப்பநிலை கொண்ட மாணவர்கள் தனி அறையில் அமர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். மதியம் 1.30 மணிக்கு, ஒவ்வொரு மாணவர்களாக சமூக இடைவெளியை கடைபிடித்து அவர்கள் தேர்வு எழுதும் அறைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
அனைத்து மாணவ, மாணவிகளும் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீட் தேர்வு நடைபெறும் மையங்களுக்கு மின்சார வாரியம் சார்பில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும் தேர்வு மையம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவை செய்தியாளர் பிரசன்னா