ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பட்லூர் வாகீஸ்வரர் கோவிலில் சிலையை முட்புதரில் வீசி சென்ற சம்பவத்தில் சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு வெள்ளித்திருப்பூர்போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அந்தியூர் அருகே உள்ள பட்லூரில் வாகீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்தக் கோவில் கருவறையில் செம்பு பித்தளையாலான சிவன் பார்வதி உற்சவர் சிலை வைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர், கருவறையில் இருந்த சிவன் பார்வதி சிலையை எடுத்து கோவில் பின்புறம் உள்ள முட்புதரில் வீசி சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து கோவிலின் செயல் அலுவலர் பிரேமா கொடுத்த புகாரின் பேரில், வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து செயல் அலுவலர் பிரேமா கூறும்போது,
கோவிலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராவில், பூசாரி தண்டாயுதபாணி கோவிலை பூட்டிச்சென்ற காட்சிகளும், அதன் பிறகு லுங்கி அணிந்து வந்த மர்ம நபர் பூட்டை உடைக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.
மேலும், கேமரா பொருத்தி இருந்ததை பார்த்த மர்ம நபர், யுபிஎஸ் இணைப்பை துண்டிக்கும் வரை நடந்த நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. என்றார்.
இதைத்தொடர்ந்து வெள்ளித்திருப்பூர் போலீசார் சிசிடிவி கேமரா பதிவை கொண்டு மர்ம நபரை தேடும் பணியை முடுக்கி விட்டுள்ளனர்.
ஈரோடு அந்தியூர் செய்தியாளர் எஸ் திருபாலா.