காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரி இறந்த மூதாட்டியின் உடலை அங்கேயே வைத்து உறவினர்கள் தடாகம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மறியல் காரணமாக 2 மணி நேரத்தில் மேல் போக்குவரத்து பாதிப்பு.
கோவை பன்னிமடை அடுத்த பாப்பநாயக்கன்பாளையம் வரப்பாளையம் பிரிவு பகுதியை வெங்கடேஷ் என்பவரது மனைவி லீலாவதி 75 வயதான இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இன்று பிரதோசம் என்பதால் அதிகாலை 6 மணியளவில் அருகில் உள்ள அழகர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக செல்வதற்காக வீட்டிலிருந்து தடாகம் சாலை வழியாக கையில் மாட்டுச்சாணம் மற்றும் பூ எடுத்துக்கொண்டு வந்துள்ளார்.
அப்போது அவ்வழியாக வந்த ஒற்றை காட்டு யானை இவரை துதிக்கையால் தாக்கி தூக்கி வீசியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த லீலாவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த லீலாவதியின் உறவினர்கள் மற்றும் விவசாய சங்கத்தினர் இறந்து கிடந்த லீலாவதியின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். தொடர்ந்து காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மூதாட்டியின் உடலுடன் தடாகம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவை வனத்துறையைச் சேர்ந்த ரேஞ்சர் சிவா, வனவர் அருண்சிங், வனக்காப்பாளர் செல்வகுமார் மற்றும் தடாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பொன்ராஜ் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் காட்டு யானைகள் ஊருக்குள் வருவது தொடர்கதையாகி வருவதாகவும் இதனால் யானை தாக்கியதில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் இதனை தடுக்க மலை ஓரங்களில் வெட்டப்பட்டுள்ள அகழிகளை அகலப்படுத்தி யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து காட்டுயானை தாக்கி பலியான மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாலை மறியல் காரணமாக சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக தடாகம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவை செய்தியாளர் பிரசன்னா