காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு, அடுத்த சில நாட்களில், டில்லியில், பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில், அக்கட்சியில் இணைகிறார்.
கடந்த, 2016 சட்டசபை தேர்தலுக்கு முன், காங்கிரஸ் கட்சியில் இணைந்த குஷ்புவுக்கு, சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரவில்லை. காங்., தலைவர் பதவியை ராகுல் ஏற்க மறுத்ததும், சச்சின் பைலட், ஜோதிர் ஆதித்ய சிந்தியா போன்றவர்கள், தலைவர் பதவியை ஏற்கலாம் என்ற கருத்துக்கு, குஷ்பு ஆதரவு அளித்தார்.
இதனால், தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி, இளைஞர் காங்., தலைவர் ஹசன் மவுலானா உள்ளிட்ட சிலர், அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
சமீபத்தில், சென்னை வந்த, தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் வரவேற்பு நிகழ்ச்சியில், குஷ்பு பங்கேற்றார்.
அப்போது, ‘தமிழக காங்கிரசில் நடக்கும் எந்த நிகழ்ச்சிக்கும், தன்னை அழைப்பதில்லை’ என, அவர் குற்றம் சாட்டினார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன், குஷ்புவின் கணவர் சுந்தர் சி, தமிழக பா.ஜ., தலைவர் முருகனை சந்தித்து பேசியதாக தெரிகிறது. எனவே, அடுத்த சில நாட்களில், டில்லியில், பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து, அக்கட்சியில் இணைகிறார் குஷ்பு. பீஹார் சட்டசபை தேர்தலில் மட்டுமின்றி, தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் சட்டசபை தேர்தலிலும், பா.ஜ.,வுக்கு ஆதரவாக களமிறங்கும் குஷ்பு, காங்கிரஸ் கட்சியையும், ராகுலையும் எதிர்த்து தீவிர பிரசாரம் செய்வார் என, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.