*உத்தரபிரதேசத்தில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.*
*ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க செய்தியாளர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் காவல்துறையினர் அவர்களை அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்து வந்தது.*
*இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன், தடைகளை தாண்டி வயல்வெளி வழியே ஓடிவந்து செய்தியாளர்களை சந்தித்தான். அப்போது தாங்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தங்களிடம் இருந்த செல்போனையும் காவல்துறையினர் பறித்து கொண்டதாகவும் குற்றம் சாட்டினார். அப்போது திடீரென காவல்துறையினர் வந்ததால் சிறுவன் அங்கிருந்து தப்பிச் சென்றான். அப்போது காவல் துறையினரை சூழ்ந்து கொண்ட செய்தியாளர்கள் சம்பவம் தொடர்பாக கேள்வி எழுப்பினர்.*
*இந்த நிலையில், சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை முடியும் வரையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்திக்க செய்தியாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.*