தெலங்கானாவில் கடந்த ஒரு வாரமாக நீடித்து வரும் கனமழைக்கு 70 பேர் உயிரிழந்துவிட்டதாக அந்த மாநில அமைச்சர் கே.டி.ராமராவ் திங்கள்கிழமை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: 1908-ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது பதிவான மழையின் அளவு இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 37,000 பேர் அப்புறப்படுத்தப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதுவரை கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சி (ஜிஎச்எம்சி) மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் 33 பேர், பிற மாவட்டங்களில் 37 பேர் என மொத்தம் 70 பேர் உயிரிழந்துள்ளனர் என்றார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதியாக ரூ. 1 கோடி வழங்குவதாகப் பிரபல நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். அதேபோல நடிகர் மகேஷ் பாபுவும் ரூ. 1 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார். பிரபல நடிகர்கள் நாகார்ஜூனா, ஜூனியர் என்டிஆர் ஆகியோர் தலா ரூ. 50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்கள்.