*சென்னை பழைய காவல் ஆணையரகம் அருங்காட்சியமாக மாறுகிறது…*
*சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையரகத்தை அருங்காட்சியகமாக மாற்றும் பணி தொடங்கியது.*
*சென்னை எழும்பூரில் இயங்கி வந்த பெருநகர காவல் ஆணையர் அலுவலகம் 178 ஆண்டுகள் பழைமையானது.*
*கடந்த 1842-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் சென்னை மாநகர காவல்துறையின் தலைமையகம், வேப்பேரியில் இயங்கி வந்தது. பின்னர், அங்கிருந்து எழும்பூர் பாந்தியன் சாலையில் இருந்த அருணகிரி முதலியாரின் 36 ஆயிரம் சதுர அடி பரப்பளவு உள்ள பங்களாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.*
*அப்போது அந்த பங்களாவுக்கு வாடகையாக மாதம் ரூ.165 காவல்துறையால் வழங்கப்பட்டது.*
*இதையடுத்து 1856-ஆம் ஆண்டு போலீஸ் சட்டம் இயற்றப்பட்டதும், நிலையான காவல் அமைப்பு உருவாக்கப்பட்டது.*
*சென்னை மாநகர காவல்துறையின் முதல் ஆணையராக லெப்டினன்ட் கர்னல் ஜெ.சி. போல்டர்சன் நியமிக்கப்பட்டார். இவருக்கு உதவியாக துணை ஆணையர்களும், உதவி ஆணையர்களும் நியமிக்கப்பட்டனர்.*
*இதைத் தொடர்ந்து அருணகிரி முதலியார் கட்டடத்தைக் காவல்துறையே ரூ.21 ஆயிரம் கொடுத்து வாங்கியது. இத்தகைய பாரம்பரியம் மிக்க சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் இடப் பற்றாக்குறையாலும், பழைமையான கட்டடத்தைப் புதுப்பிக்க முடியாமலும் இருந்து வந்தது. எனவே, காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நவீன வசதிகளோடு புதிதாகக் கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.*
*பழமை மாறாமல் காவல்துறையை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் ரூ. 25 கோடி செலவில் வேப்பேரி ஈ.வி.கே. சம்பத் சாலையில் செயல்பட்டு வந்த மாநகர போக்குவரத்துக் காவல்துறை கூடுதல் ஆணையர் அலுவலக வளாகத்தில், புதிய ஆணையர் அலுவலகம் 1.73 லட்சம் சதுர அடியில் 8 தளங்களுடன் கட்டப்பட்டது.*
*இந்தக் கட்டடத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் காவல் ஆணையரகம் செயல்படத் தொடங்கியது. பழைய காவல் ஆணையர் அலுவலக வளாகத்தின் முன் பகுதியில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு, அதில் தமிழக சீருடைப் பணியாளர் தேர்வாணையம், சிபிசிஐடி, ரயில்வே காவல்துறை ஆகியவை செயல்படுகின்றன. ஆனால் அங்குள்ள காவல் ஆணையர் அறை உள்ளிட்ட அனைத்து அறைகளும் அப்படியே உள்ளன. இப்போது அந்த அறைகளை சீரமைத்து அருங்காட்சியகமாக மாற்றும் பணி முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது.*
*பழைய ஆணையர் அலுவலகத்தை பழைமை மாறாமல் புதுப்பித்து அழகுபடுத்தும் பணியில் 100 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த அருங்காட்சியத்தை அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் திறப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.*
*ஏற்கெனவே, கோயம்புத்தூரில் போலீஸ் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுவிட்ட நிலையில், தமிழகத்தில் 2-ஆவதாக சென்னை எழும்பூரில் போலீஸ் அருங்காட்சியகம் அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.*
*இந்த அருங்காட்சியகத்தில் காவல்துறையின் முக்கிய வரலாற்று ஆவணங்கள், காவல்துறை தொடர்பான அந்த காலத்தில் இயற்றப்பட்ட அதிமுக்கிய அறிவிப்புகள், ஆங்கிலேய காவல்துறையினர் பயன்படுத்திய ஆயுதங்கள், தமிழக காவல்துறையின் தொடக்கக் கால சீருடைகள், பெல்ட், மோப்ப நாய்ப்படைகளின் புகைப்படங்கள், வரலாற்றுச் சிறப்பு மிக்க செய்தித் தொகுப்புகள், வயர்லெஸ் கருவிகள், காவல்துறை பதக்கங்கள், கலைப்பொருள்கள் ஆகியவை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும்.*
*தமிழக காவல்துறையின் வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் விதமாக இந்த அருங்காட்சியகம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.*
*தமிழக காவல் துறையில் வீர தீரச் செயல்களில் ஈடுபட்டு உயிரிழந்த காவல் அதிகாரிகள், காவலர்களின் பெயர்களும் அருங்காட்சியகத்தில் ஒரு சுவரில் பொறிக்கப்படுகிறது.*
*இந்த அருங்காட்சியகம் தமிழக காவல்துறையின் பாரம்பரியத்தையும், பழைமையையும் பொதுமக்களிடம் எடுத்துக் கூறும் என காவல்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.*