358 பேருக்கு சான்றிதழ் வழங்கினார் சைலேந்திரபாபு டிஜிபி
மணிமுத்தாறு காவலர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி முடித்த 358 காவலர்களுக்கு தமிழ்நாடு தீயணைப்புத்துறை இயக்குநர் சைலேந்திரபாபு சான்றிதழ் வழங்கினார்.
மணிமுத்தாறில் உள்ள தமிழ்நாடு காவலர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்ற 358 காவலர்களுக்கு பயிற்சி நிறைவடைந்தது. இதையடுத்து அவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காவலர் பயிற்சிக் கல்லூரி முதல்வர் ஏசு சந்திரபோஸ் தலைமை வகித்தார். தமிழ்நாடு தீயணைப்புத் துறை இயக்குநர் சைலேந்திர பாபு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பயிற்சி முடித்த 358 காவலர்களுக்கு பயிற்சி நிறைவு செய்ததற்கான சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
தொடர்ந்து அவர் தமது உரையில் தமிழகத்தில் பல லட்சம் இளைஞர்கள் காவல் துறையில் சேர வேண்டும் என்று ஆவலில் உள்ள நிலையில் உங்களுக்குக் கிடைத்துள்ளது. காவல் துறை என்பது ஓர் அரசின் முக்கியமான அங்கம். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காவல் பணியில் உள்ளவர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்ய வில்லையென்றால் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் குறையும், விவசாயம், நெசவு உள்ளிட்ட தொழில்புரிவோருக்கு தொழில் மறந்து போகும் என்று குறிப்பிட்டுள்ளார். உங்கள் பயிற்சியில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி மட்டும் போதாது, தொடர்ந்து உடற்பயிற்சி, கவாத்து பயிற்சி உள்ளிட்டவற்றை மேற்கொண்டு அறிவு மற்றும் உடல் திறனை பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் துணை முதல்வர் மணிவண்ணன், சேரன்மகாதேவி உதவி காவல் கண்காணிப்பாளர் பிரதிப், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநர் திலீப் குமார், பயிற்சிக் கல்லூரி காவல் அதிகாரிகள், பயிற்சி காவலர்கள், பெற்றோர், உறவினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பயிற்சி முடித்தக் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை காவல் துறை இயக்குநர் சைலேந்திரபாபு ஏற்றுக் கொண்டார்.