புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்குச் செல்ல பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயலால் டிச. 3 மற்றும் டிச. 4 இரண்டு நாள்கள் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பலத்த மழை இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் வருவாய்த்துறையினரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து புயல் மழையால் பாதிக்கப்படும் இடங்கள் என்று கண்டறியப்படும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் இது குறித்து அம்பாசமுத்திரம் வருவாய் வட்டாட்சியர் வெங்கட்ராமன் கூறும்போது, அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்கள், பாபநாசம், காரையாறு, சேர்வலாறு, பாபநாசம் கீழணை, திருவள்ளுவர் நகர் மற்றும் வைராவிகுளம் ஆகிய பகுதிகள் புயல் மழையால் பாதிக்கப்படும் இடங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களில் புயல் மழையால் பாதிக்கப்படும் மக்களைத் தங்க வைப்பதற்கு முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்குச் செல்ல டிச. 2 முதல் 4 நாள்களுக்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. காரையாறு மற்றும் சேர்வலாறு காணிக்குடியிருப்பில் வசிக்கும் காணி மக்கள் தேவையில்லாமல் குடியிருப்புகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாஞ்சோலையில் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் நிரம்பிய நிலையில் உள்ள 45 குளங்கள் பலப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் மறு அறிவிப்பு வரும் வரை தாமிரவருணியில் குளிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது என்றார்.