Featuredஅரசியல்செய்திகள்டிரெண்டிங்

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வழியில் தொடரட்டும் ரஜினியின் பணி

ரஜினிக்கு சைதை சா. துரைசாமி ஆதரவு

அந்தணன்

புதிய கட்சித் தொடங்குவதாக ரஜினி அறிவிப்பு வெளியிட்டதையடுத்து பல்வேறு தரப்பினரும் ஆதரவும், விமர்சனமும் செய்து வருகின்றனர். மனித நேயம் அமைப்பின் நிறுவனரும் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயருமான சைதை. சா. துரைசாமி ரஜினியின் அரசியல் கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி தொடங்கவிருப்பதாகவும் அது குறித்து டிசம்பர் 31இல் அறிவிப்பு வெளியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

இது சாதாரண அறிவிப்பு அல்ல. தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய திருப்பம் இது. 1972இல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கொண்டு வந்த மாற்றத்தைப் போல அமையக்கூடிய திருப்பத்தை சூப்பர் ஸ்டார் ரஜினி அறிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டு மார்ச் 5இல் சென்னை வேலப்பன் சாவடியில் புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல் இதய தெய்வம் எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் அவர் என்னால் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். போல நல்லாட்சியை, ஏழைகளுக்கான ஆட்சியை, சாமானியர்களுக்கான ஆட்சியை, நடுத்தர வர்க்க குடும்பத்தினருக்கான ஆட்சியை தரமுடியும் என்பதை ஆழ்ந்த நம்பிக்கையுடன் உறுதிபடச் சொல்லி இருந்தார்.

நல்ல திறமையான ஆலோசகர்களையும், தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி அத்தகைய ஆட்சியைக் கொடுப்பேன் என்றும் சொல்லி இருந்தார். ஏழைகளுக்கான, சாமானியர்களுக்கான புரட்சித் தலைவரின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் மலரச் செய்ய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முன்வந்திருப்பதை நான் வரவேற்கிறேன்.

எம்.ஜி.ஆருக்குத் துணை நின்று ஆதரவளித்து, தி.மு.க.வை வீழ்த்திய அனைவரும் இவருக்கும் ஆதரவு தருவார்கள் என்பது திண்ணம்.

கொரானோ நோய்த் தொற்று காலத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தமிழக மக்களின் நலனை மட்டுமே மனதில் கொண்டு முழுநேர அரசியலில் ஈடுபடுவது என்று அவர் முடிவு எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கது. தமிழ்நாட்டின் தலைஎழுத்தை மாற்றக் கூடிய நாள் வந்தாச்சு, நிச்சயம் அது நடக்கும் என்ற ரஜினியின் நம்பிக்கையான வார்த்தையை வரவேற்று அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button