அந்தணன்
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான புரெவி புயல் டிச. 2 இரவில் இலங்கையில் கரையைக் கடந்து மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டது. கடல் பகுதியில் நீண்ட நேரம் நிலை கொண்டதையடுத்து புயல் வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. இதையடுத்து டெல்டா மாவட்டங்களிலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட இடங்களிலும் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், வங்க கடலில், மன்னார் வளைகுடா பகுதியில் நிலவிய புரெவி புயல் சற்றே விலுவிழந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வெள்ளிக்கிழமை காலை 5.30 மணியளவில் ராமநாதபுரம் கடற்கரை அருகே நிலை கொண்டுள்ளது.
இது மேற்கு – தென்மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ராமநாதபுரம் மற்றும் அதையெட்டியுள்ள தூத்துக்குடி கடற்கரையை அடுத்த சில நேரங்களில் கடக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் அருகே நிலைகொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் 36 செ.மீ. மழையும் சிதம்பரத்தில் 34 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. பரங்கிப்பேட்டை (கடலூர்) 26 செ.மீ. மழையும் மணல்முடி மற்றும் குறிஞ்சிப்பாடி (கடலூர்) 25 செ.மீ. மழையும், திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) 22 செ.மீ. மழையும் சீர்காழி (நாகை) குடவாசல் (திருவாரூர்) 21 செ.மீ. மழையும் ராமேஸ்வரத்தில் 20 செ.மீ. மழையும், பேராவூரணி, மஞ்சளாறு, புவனகிரி, மயிலாடுதுறையில் 19 செ.மீ. மழையும் கறம்பக்குடி, பட்டுக்கோட்டை (தஞ்சை) 17 செ.மீ. மழையும் மதுக்கூர் 16 செ.மீ. மழையும் ஸ்ரீமுஷ்ணத்தில் 15 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டது. சிதம்பரத்தில் பெய்த தொடர் மழையால் சிதம்பரம் நடராஜர் கோயிலினுள் மழை நீர் தேங்கி கோயில் முழுவதும் தெப்பமாக மாறியது. டெல்டா மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் பயிர்கள் நீரில் மூழ்கியதோடு, மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.