பாபநாசம் அருகே தனியார் தோட்டத்தில் வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி காட்டுயானை உயிரிழந்தது
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கடையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தனியார் தோட்டத்தில் வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கிய பெண் காட்டு யானை உயிரிழந்தது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அம்பாசமுத்திரம் கோட்டம் கடையம் வனச்சரகம் ஆம்பூர் பீட் பகுதியில் செல்லக்குட்டி என்பவருக்கு சொந்தமான வயல் உள்ளது. வயலில் நெல் பயிரிட்டுள்ள செல்லக்குட்டி வனவிலங்குகளின் தொந்தரவை கட்டுப்படுத்துவதற்காக தோட்டத்தைச் சுற்றிலும் அனுமதி இன்றி மின்வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு அந்த பகுதிக்கு வந்த பெண் காட்டு யானை மின் வேலியைத் தாண்ட முயன்ற போது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறை, காவல் துறை, மின்வாரியம் மற்றும் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இறந்த யானைக்கு சுமார் 40 வயது இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டத்தில் இரண்டு மாதங்களில் ஒரு சிறுத்தை மற்றும் 2 யானைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.