தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம் ஊர்மேலழகியான் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட வேலாயுதபுரம் செல்லும் சாலையில் RVS மேல்புறம் ஆதி திராவிடர் நலத்துறை யின் மூலம் 1992-ம் ஆண்டு காசிதர்மம், கண்டுகொண்டான் மாணிக்கம் ஆகிய கிராமங்களில் உள்ள 46 ஆதி திராவிடர் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
அந்த வீட்டுமனையில் அனைவரும் குடிசை போட்டு வசித்து வந்தனர். தற்போது சிலர் வீடுகள் கட்டுவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்தனர்.
இந்நிலையில் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் தன் சுய செல்வாக்கை பயன்படுத்தி 46 வீட்டுமனைகளையும் ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்து தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டார். அந்த அரசியல் பிரமுகர் போட்ட முள்வேலியை பட்டாதாரர்களான 46 பேரும் அகற்றி விட்டனர்.
மேற்படி வேலாயுதபுரம் சேர்ந்த ஆளும் கட்சி பிரமுகர் சரோஜாவின் தூண்டுதலின் பேரில் தென்காசி ஆதி திராவிடர் நலத்துறை துணை வட்டாட்சியர் திரு. பாபு மற்றும் சாம்பவர்வடகரை காவல் உதவி ஆய்வாளர் திருமதி. செல்வி ஆகியோர் தனியார் வாகனத்தில் வந்து ஜேசிபி இயந்திரம் மூலம் கட்டுமானப்பணிகளை தடுத்து நிறுத்தி தோண்டிய அஸ்திவாரங்களையும் இயந்திரம் மூலம் மூடி விட்டு வீட்டுமனை உங்களுக்கு சொந்தமானது அல்ல என்று கூறி குடிசைகளையும் அப்புறப்படுத்திச் சென்றனர்.
இது முற்றிலும் ஏழை எளிய மக்களை துன்புறுத்தும் செயலாகும். எனவே சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரிகள் தலையிட்டு தங்குவதற்கு வீடின்றி தவித்து வரும் 46 பயனாளிகளுக்கும் அவர்களது வீட்டுமனை கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விசில் வீரமணி