தமிழகக் காவல்துறையில் புதிய மாற்றம் வர உள்ளது. இதற்கான பரிந்துரை சென்றிருந்த நிலையில், மண்டல ஐஜிக்கள் பதவி இனி மண்டல ஏடிஜிபிக்கள் அந்தஸ்துக்கு உயர்த்தப்படுகிறது. முதல் கட்டமாக தென்மண்டல ஐஜி பதவி ஏடிஜிபி அந்தஸ்துக்குத் தகுதி உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட அளவிவில் டிஐஜி பதவிகள் ஐஜிக்களாகத் தரம் உயர்த்தப்படும் வாய்ப்பும் வர உள்ளது.
தமிழகக் காவல்துறையில் உயர்ந்த பதவி சட்டம்- ஒழுங்கு டிஜிபி பதவி ஆகும். அனைத்துக் காவல்துறைகளும் சட்டம்- ஒழுங்கு டிஜிபியின் கீழ் வருகிறது. இதனால் சமீபத்தில் இப்பதவி காவல்துறை தலைமை அதிகாரி பதவியாக அழைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவருக்குக் கீழ் மற்ற துறை டிஜிபிக்கள் வருவார்கள். அவர்களுக்குக் கீழ் ஏடிஜிபி அந்தஸ்து அதிகாரிகள் உள்ளனர். ஏடிஜிபி அந்தஸ்து பதவியில் முக்கியமானது சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி பணி ஆகும்.
சமீபத்தில் சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி பதவி தகுதி உயர்த்தப்பட்டு தனியாக சட்டம்- ஒழுங்கு சிறப்பு டிஜிபி என்பதாக தகுதி உயர்த்தப்பட்டது. பின்னர் அப்பதவி மீண்டும் சட்டம்- ஒழுங்கு ஏடிஜிபியாக பழைய நிலைக்கு மாற்றப்பட்டது. ஆனாலும், அது நீண்ட நாட்கள் இருக்காது. மீண்டும் சட்டம்- ஒழுங்குக்கு சிறப்பு டிஜிபி நியமிக்கப்படுவார் என்ற கருத்து பரவலாக உள்ளது.
சென்னை காவல் ஆணையரும் ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ளவராக இருக்கிறார். தமிழகத்தில் உள்ள காவல் அதிகாரிகள் வகிக்கும் பதவியில் சென்னை காவல் ஆணையர் பதவியும் முக்கியப் பதவி ஆகும். இது தவிர பல துறைகள் காவல்துறையில் வருகின்றன. சட்டம்- ஒழுங்கு ஏடிஜிபிக்குக் கீழ் தமிழகத்தில் 4 ஐஜிக்கள் வருகின்றனர். மேற்கு மண்டலம், மத்திய மண்டலம், தென் மண்டலம், வடக்கு மண்டலம் என 4 மண்டலங்கள் வருகின்றன.
மண்டல ஐஜிக்களுக்குக் கீழ் டிஐஜிக்கள், மாவட்ட எஸ்.பி.க்கள் என அடுக்கு உள்ளது. இது தவிர ஆணையர்கள் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், நெல்லை, திருப்பூர் என 7 காவல் ஆணையர்கள் ஐஜி அந்தஸ்தில் பதவி வகிக்கின்றனர்.
இதில் சென்னை காவல் ஆணையர் அதீத அதிகாரம் உள்ள பதவி ஆகும். மற்ற 6 காவல் ஆணையர்களும் ஐஜி அந்தஸ்தில் உள்ளனர். இவர்கள் ஏடிஜிபி சட்டம்-ஒழுங்குக்குக் கீழ் வருவார்கள். இதிலும் ஒரு மாற்றம் கொண்டுவரப்பட்டது. சமீபத்தில் மதுரை காவல் ஆணையர் ஏடிஜிபியாகப் பதவி உயர்வு பெற்றபோது மதுரை காவல் ஆணையரகமும் ஏடிஜிபி அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டது. சென்னையில் ஐஜி அந்தஸ்து அதிகாரிகள் கூடுதல் ஆணையர்களாகவும், டிஐஜி அந்தஸ்து அதிகாரிகள் இணை ஆணையர்களாகவும் உள்ளனர்.
நீண்டகாலமாக மாவட்ட அளவில் எஸ்.பி.க்களுக்கு மேல் சரக டிஐஜி பதவியால் சரிவர எஸ்.பி.க்களைக் கையாள முடியவில்லை. எஸ்.பி.க்களுக்கு மேல் உள்ள அதிகாரிகள் ஐஜி அந்தஸ்தில் இருந்தால் சரியாக இருக்கும் என்கிற கருத்து வலுத்து வந்தது. இதற்கான பேச்சுகளும் நடந்த நிலையில் அது கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் சரக டிஐஜி அந்தஸ்து பதவியை ஐஜி அந்தஸ்துக்குப் பதவி உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி மாவட்டங்களில் சரக டிஐஜிக்கள் அந்தஸ்து உள்ள இடங்களில் அந்தப் பதவி ஒழிக்கப்படுகிறது. மாவட்ட எஸ்.பி.க்கள் சரக டிஐஜிகளுக்கு பதில் சரக ஐஜிக்கள் பதவி உள்ளதாகத் தரம் உயர்த்தப்படுகிறது.
சரக ஐஜிக்களாக பதவி உயர்த்தப்பட்ட பின்னர் மண்டல ஐஜிக்கள் பதவி இடத்தில் தாமாக கூடுதல் அந்தஸ்து உள்ள அதிகாரிகள் பதவியாக மாற்றப்படவேண்டும். அதன் அடிப்படையில் 4 மண்டலங்களுக்கும் இனி கூடுதல் டிஜிபி அந்தஸ்து உள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.
இதனால் இனி நான்கு மண்டலங்களும் ஏடிஜிபி மண்டலங்களாக அறிவிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் முதல் படியாக தென்மண்டல ஐஜி பதவி ஏடிஜிபி அந்தஸ்துக்கு மாற்றப்பட்டதாக காவல்துறை வட்டாரத்தில் தகவல் உலாவுகிறது. இதேபோன்று 6 காவல் ஆணையர்களும் ஏடிஜிபி அந்தஸ்து அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள்.
ஏற்கெனவே மதுரையில் ஏடிஜிபி அந்தஸ்து அதிகாரி நியமிக்கப்பட்டு பின் மாற்றப்பட்டது. தற்போது கோவை காவல் ஆணையர் ஐஜி அந்தஸ்து அதிகாரி இருந்த நிலையில் ஏடிஜிபி அந்தஸ்து அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டதன் மூலம் ஏடிஜிபி அந்தஸ்துக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
மாவட்டங்களில் ஏடிஜிபி அந்தஸ்துக்கு காவல் ஆணையர்கள் அந்தஸ்து உயர்த்தப்படும்போது பெரிய நகரமான சென்னை காவல் ஆணையர் பதவியும் ஏற்கெனவே ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள நிலையில் இந்தியாவின் மற்ற மெட்ரோ நகரங்கள்போல் டிஜிபி அந்தஸ்துக்கு மாற்றப்படும் எனத் தெரிகிறது. ஏற்கெனவே டிஜிபி அந்தஸ்தில் ஜார்ஜ் மற்றும் டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் பதவி வகித்துள்ளனர்.
அதேபோன்று நான்கு மண்டலங்களுக்கும் ஏடிஜிபிக்கள் அந்தஸ்து அதிகாரிகள் நியமிக்கப்படுவதன் மூலம் சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி பதவி தாமாக வலுவிழப்பதால் அந்தப் பதவி இனி இருக்காது அது இனி சிறப்பு டிஜிபி (சட்டம் & ஒழுங்கு) என மாற்றப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபிக்கு பதில் மாநில அளவில் நான்கு மண்டல கூடுதல் டிஜிபிக்களுக்கும் சட்டம்- ஒழுங்கு சிறப்பு டிஜிபி நியமிக்கப்படுவார்.
மேற்கண்ட மாற்றம் விரைவில் அமலுக்கு வரலாம் எனக் காவல்துறை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.