2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டது. தென்காசி மாவட்ட பொறுப்பாளர் சிவ பத்மநாபன் தென்காசி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விரும்பிய நிலையில் தொகுதி காங்கிரஸிற்கு ஒதுக்கப்பட்டது உள்ளபடியே அவருக்கு பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது. தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் தொகுதியும் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணாவிற்கு ஒதுக்கப்பட்டது. சிவ பத்மநாபன் போட்டியிட வாய்ப்புள்ள இரண்டு தொகுதிகளிலும் தான் நிற்க வாய்ப்பில்லாமல் போனது அவருக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
தென்காசி மாவட்டத்தின் பொறுப்பாளராக உள்ள சிவ பத்மநாபன் தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவாக தேர்தல் பணியில் ஈடுபடுவார் என்று திமுகவினரும், கூட்டணி கட்சியினரும் பெரிதும் நம்பியிருந்த நிலையில் அவர் திமுக நேரடியாகப் போட்டியிட்ட சங்கரன்கோவில் தொகுதியில் மட்டுமே தமது முழு கவனத்தை செலுத்தியதோடு தேர்தல் பணியையும் முடுக்கிவிட்டார் என்று திமுகவினரே முனுமுனுக்கும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் தென்காசி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட பழனி நாடார் நீண்ட இழுபறிக்குப் பின் 370 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து பழனிநாடார் திமுக சார்பில் எந்த ஒரு தேர்தல் பணியும் செய்யவில்லை, செய்திருந்தால் இந்த இழுபறி நிலை ஏற்பட்டிருக்காது என்று தனது கட்சியினரிடையே வருத்தப்பட்டு பேசி வந்தார்.
இது குறித்து பழனிநாடார் காங்கிரஸ் மேலிடத்திற்கும், திமுக மேலிடத்திற்கும் புகார் அனுப்பியுள்ளதாகவும் தெரிகிறது. மேலும் திமுக மேலிடமும் சிவ பத்மநாபனிடம் இது குறித்து விளக்கம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சமூக ஊடகங்களிலும் காங்கிரஸ் மற்றும் திமுகவினர் தென்காசி தொகுதி தேர்தல் குறித்து தங்கள் தங்கள் கருத்துகளை வெளியிட்டு கருத்து மோதல்களில் ஈடுபட்டுள்ளனர்.
திமுகவினர் தென்காசி தொகுதியில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நிர்வாகிகளை நியமித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதோடு தேர்தல் அன்று வாக்குச் சாவடி பணி, வாக்கு எண்ணிக்கையன்று வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்கும் பணி என்று அனைத்து பணிகளை மேற்கொண்டனர். வாக்கு எண்ணிக்கையின் போது திமுகவினர் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடப்பதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்துதான் அவரது வெற்றி உறுதியானது. வாக்குவாதம் நடந்த நேரத்தில் வெற்றி பெற்ற வேட்பாளரும் இருந்தார். அப்படி இருக்கையில் திமுக தேர்தல் பணி ஆற்றவில்லை என்று கூறுவது பகையை வளர்ப்பதாக உள்ளது என்று திமுகவினர் தங்கள் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
இந்த கருத்து மோதல் தொகுதி மக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. மேலும், ஆளும் கட்சி கூட்டணியில் உள்ள வேட்பாளர் வெற்றி பெற்ற நிலையில் ஆளும் கட்சியினருக்கும் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கூட்டணி கட்சியினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள புகைச்சலால் தொகுதித் தேவையான வளர்ச்சி பணிகள் தடைபடுமே என்ற அச்சத்திலும் உள்ளனர்.
எது எப்படியோ, காங்கிரஸ் கட்சியினரும் திமுகவினரும் தங்கள் எண்ணங்களை ஒதுக்கி விட்டு தொகுதி மேம்பாட்டிற்கு உரிய பங்காற்ற வேண்டும் என்பதே தொகுதி மக்களின் விருப்பமாக உள்ளது.