பாலியல்குற்ற வழக்குப்பதிவு – முன்னாள் அமைச்சர் தலைமறைவு
முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி நேற்று அளித்த புகார் மீது போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளன. . 2017 ல் பரணி என்ற துணை நடிகர் மூலம் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டனுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், ஐந்து வருடம் அவருடன் சேர்ந்து வாழ்ந்ததாகவும் , தன்னை மூன்று முறை கட்டாய கருச்சிதைவு செய்யச் சொன்னதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், திருமணம் செய்துகொள்வதாக தொடர்ந்து ஆசை வார்த்தை காட்டி மோசடி செய்ததாகவும், தன்னை அந்தரங்கமாக புகைப்படம் , வீடியோ எடுத்து அதை வைத்து மிரட்டியதாகவும் வாட்ஸப் சாட் ஆதாரங்கள் மூலம் குற்றஞ்சாட்டியிருந்தார்.
காவல் ஆணையரிடம் அளித்த இந்த புகார் மனு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவிற்கு அனுப்பப்பட்டது.
அதன்பின்னர் நடிகை சாந்தினி வசித்து வரும் பகுதிக்குரிய அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. புகாரை விசாரித்த போலீசார், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கட்டாயப்படுத்தி கருவை கலைத்தல், இபிகோ 313, அடித்து காயம் ஏற்படுத்துதல் 323, நம்பிக்கை மோசடி,417, பாலியல் வன்கொடுமை 376 கொலை மிரட்டல் 506 (1) மற்றும் தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல்,67(a)ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ள்ளனர்.அடுத்த கட்டமாக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை தேடுகின்றனர்.
ராமநாதபுரத்தில் உள்ள அவரது வீடு பூட்டப்பட்டு இருப்பதாக கூறிய போலீசார், விரைவில் கைது செய்து நடவடிக்கை எடுக்கவிருப்பதாக தெரிவித்தனர். மணிகண்டன் தலைமறைவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.