கோக்கு மாக்கு

நாகையில் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் தனது அரசு வேலையை ராஜினாமா செய்து அதில் வரும் தொகையை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க முன் வந்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர முதல்வருக்கு பலரும் நிவாரண நிதிகளை ஆர்வத்துடன் வழங்கி வருகின்றனர். அதன்படி நாகையில் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் தனது அரசு பணியை ராஜினாமா செய்து அதில் வரும் தொகையை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க முன் வந்துள்ளார். நாகை அடுத்துள்ள தெத்தி சமரசம் நகரில் வசித்து வருபவர் புத்த நேசன். இவர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள நெடுங்குளம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கொரோனா அவலங்களையும், மக்கள் அல்லல்படும் நிலையையும்,  உயிரிழப்புகளையும் தொலைக்காட்சிகளில் தனது குடும்பத்தோடு பார்த்த ஆசிரியர் புத்தநேசன் தனது அரசு பணியை ராஜினாமா செய்து அதில் வரும் பிடித்த தொகைகளை முதல்வருக்கு கொரோனா நிதியாக வழங்க முடிவெடுத்துள்ளார். அதனை தொடர்ந்து தனது குடும்பத்தோடு நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயரை சந்தித்த அவர், ராஜினாமா கடிதத்தை வழங்கினார். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் கல்வித்துறைக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களுக்கு வாழ்த்து கூறினார். மக்கள்படும் இன்னல்களை கண்டு தனது மனைவி கோமதி, மகள் சுவாதியா ஆகியோரின் சம்மதத்தோடும், அரசுக்கு தாங்களும் எதாவது செய்யவேண்டும் எனவும் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், அரசு எனது ராஜினாமா கடிதத்தை ஏற்று பிடித்த தொகையை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உடற்கல்வி ஆசிரியர் புத்த நேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வரும் நிலையில் நாகையில் உடற்கல்வி ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்து உதவ முன் வந்து இருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் : ச.ராஜேஷ்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button